ஸ்ரீபெரும்புதுார்: வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், தவன உத்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு கிராமத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், முதல் முறையாக தவன உத்வசம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத சுந்தர வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தவணம் எனும் மரிக்கொழுந்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மகாமண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு, பெருமாளுக்கு தவனங்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு ஊஞ்சல் உத்சவம் சிறப்பாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுந்தர வரதராஜ பெருமாளை தரிசித்தனர்.