கீழச்சிவல்பட்டி: திருப்புத்தூர் ஒன்றியம் கீரணிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் மகோத்ஸவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
திருப்புத்தூர் ஒன்றியம் இளையாத்தக்குடி கைலாசநாதசுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனி மகோத்ஸவம் பத்துநாட்கள் நடைபெறும். மார்ச் 29ல் கீரணிப்பட்டியில் முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து ஏப்.5ல் உற்ஸவ அம்மன் இளையாத்தக்குடியிலிருந்து கீரணிப்பட்டிக்கு எழுந்தருளி காப்புக்கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் அம்மன் வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை அம்மன் தேரில் எழந்தருளினார். தொடர்ந்து சுற்று வட்டாரக் கிராமத்தினர் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 5:00 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது. திரளாக பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். இன்று மாலை அம்மன் கீரணிப்பட்டியிலிருந்து சி்ம்ம வாகனத்தில் இளையாத்தங்குடிக்கு எழுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது.