மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் விஷூக்கனி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 10:04
கன்னியாகுமரி: கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் விஷூக்கனி தரிசனம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.
கேரளாவில் மாநிலம் முழுவதிலும் விஷூ பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி ஐஸ்வரியம் பெருகவும், செல்வம் கொழிக்கவும், கிடைத்த செல்வம் நிலைக்கவும் வேண்டி கோவில்கள், வீடுகளில் விஷூ கனி கண்டு மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதே போல மக்கள் அவரவர் வீடுகளில் விஷூ பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்போது குடும்பத்தினர்களுக்கு வீட்டில் உள்ள முதியவர்கள் புத்தம் புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை கை நீட்டமாக வழங்கி மன நிறைவுடன் கொண்டாடும் ஐஸ்வர்ய விழா விஷூ பண்டிகையாகும்.
இதை முன்னிட்டு மலையாள மக்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து விஷூ கனி தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. திரளான மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் நடத்தி கனி கண்டு வழிபாடு நடத்தினர். வீடுகளிலும் கிருஷ்ணனை அலங்கரித்து மலர் மாலை அணிவித்து புத்தாடை, கண்ணாடி, காய்கறி, பழங்கள், கனிக்கொன்றை பூக்களை வைத்து கனி காணும் சடங்கு நடை பெற்றது. பக்தர்களுக்கு வெற்றிலையில் நாணயங்கள், கை நீட்ட பிரசாதமாக கோவில் அர்ச்சகர் வழங்கி உள்ளார். இதே போல கேரளாவில் புகழ்பெற்று குருவாயூர் கோவில், சபரிமலை கோவில் உட்பட பிரசித்திபெற்ற கோவில்களிலும் இன்று விஷூ கனி தரிசனம் நடைபெற்றது.