பதிவு செய்த நாள்
22
ஏப்
2026
08:04
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.
உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணாவின் கோகர்ணா கடற்கரைக்கும், கூட்லு கடற்கரைக்கும் இடையே உள்ள சிறிய மலையில் அமைந்து உள்ளது, ஸ்ரீராமர் கோடி தீர்த்தம் கோவில். இங்கு ஸ்ரீராமர் சீதா, லட்சுமணருடன் அருள்பாலிக்கிறார். இக்கோவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாபலேஸ்வரர் கோவிலில் இருந்து 750 மீட்டர் துாரத்தில் அமைந்து உள்ளது.
புராணங்களின் படி, போரில் ராவணனை வதம் செய்து, 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்து கொண்டு, அயோத்திக்கு ராமர் சென்றார். அங்கு அவர் மன்னராக மூடிசூட்டப்பட்டார். இறுதியில், அவர் பேரரசராகி நாட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி, நீதியுடன் ஆட்சி செய்தார். ஒரு நாள் வசிஷ்ட முனிவர், அகத்தியர் உட்பட சில முனிவர்கள், ராமரை பார்க்க சென்றனர். அங்கு அவரை பார்த்த முனிவர்கள், ராவணன், கும்பகர்ணன் உட்பட பலரை கொன்றது குறித்து கேட்டனர்.
போர் தொடர்பாக ராமர் விவரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டார். ராவணனும், மற்ற அசுரர்களும் குலத்தால் பிராமணர்கள். அவர்களை கொன்றதால், பிரம்மஹஸ்தி தோஷத்தில் சிக்கி உள்ளேன். இந்த பாவத்தில் இருந்து விடுபட தீர்வு சொல்லும்படி முனிவர்களிடம் கேட்டு கொண்டார். அதற்கு அகத்தியர், ‘கவலைப்பட வேண்டாம்; அரபிக்கடலில் தென்கரையில் கோகர்ணா என்ற இடம் உள்ளது. அங்குள்ள கோடி தீர்த்தத்தில் பக்திபூர்வமாக நீராடி, மஹாபலேஸ்வரை வழிபட்டால், அந்த பாவம் போகும்’ என்றார்.
அதன்படி, ஸ்ரீராமர், சீதா, லட்சுமணருடன் கோகர்ணாவுக்கு சென்றார். அவர், கடலை நோக்கி உள்ள சதாஸ்ருங்க மலையின் கம்பீரமான சிகரத்தில் ஆசிரமம் அமைத்தார். அங்கு ஒரு தீர்த்த குண்டத்தை உருவாக்கி, தனது பாவங்கள் அனைத்தும் நீங்கும் வரை மஹாபலேஸ்வர பெருமானை வழிபட்டு, அயோத்திக்கு திரும்பினார்.இப்பகுதியில் கோடி தீர்த்தம் மிகவும் புனிதமான நீர்நிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தங்கள் பாவங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். இக்கோவிலுக்கு வருவதற்கு முன், தீர்த்தத்தில் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகளை செய்கின்றனர்.
எப்படி செல்வது?
விமானத்தில் செல்வோர், ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 150 கி.மீ., பஸ், டாக்சியில் செல்லலாம்.
ரயிலில் செல்வோர், கோகர்ணா ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், கோகர்ணா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ அல்லது நடந்து செல்லலாம்.