பதிவு செய்த நாள்
22
ஏப்
2026
07:04
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்டு, மஹா விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. வைணவ மத நம்பிக்கையில் முக்கிய மையமாகவும் உள்ளது. பழங்கால கோவில் என்பதால் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இக்கோவிலுக்கு வந்து விஷ்ணுவை தரிசித்து சென்றால், வாழ்க்கையில் சகல வரங்களும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலில் கட்டட கலையும் பக்தர்களை வெகுவாக கவருகிறது. வடமாநிலங்களில் உள்ள ஹிந்து கோவில்களில் பயன்படுத்தப்படும் நாகரா பாணி கட்டட கலையில் இருப்பதால், பக்தர்கள் மெய்சிலிர்த்து பார்க்கின்றனர்.
கோவிலின் முன்பு இருக்கும் 55 அடி உயர கருட கம்பம், ஏழு மாடி கொண்ட கோவில் கோபுரம் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. சவும்ய கேசவா, லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர் ஆகிய மூல தெய்வங்கள் மூன்று சன்னதிகளில் இருப்பதால், இக்கோவிலை திரிகூடம் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். சவும்ய கேசவரின் சிலை சவும்யகேசவம் என்று அழைக்கப்படும் கருட பீடத்தின் மீது உள்ளது.
போசள பேரரசின் காலத்தில் கட்டப்பட்டாலும், விஜயநகர பேரரசின் கட்டட கலைகளை எடுத்துக்காட்டும் வகையில் கோபுரம், பிரஹாரம், நுழைவு வாயில்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. கோவிலுக்குள் புவனேஸ்வரி என்ற பெயரில் மண்டபம் உள்ளது.
இதன் மேற்கூரை கலை நயம் மிகுந்தது. விரிந்த தாமரை மலர் மீது அமர்ந்திருப்பது போன்றும், சங்கை சுற்றி நாக பாம்பு இறுக்கமாக சுற்றி கொண்டிருப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கும் கட்டமைப்பு ஈர்க்க கூடியது. கோவில் நடை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் திறந்து இருக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து 120 கி.மீ., துாரத்திலும், மாண்டியாவில் இருந்து 40 கி.மீ., துாரத்திலும் நாகமங்களா உள்ளது.
பெங்களூரு – மைசூரு ரோட்டில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, நாகமங்களாவுக்கு நேரடி அரசு பஸ் சேவை உள்ளது.
ரயிலில் சென்றால் பி.ஜி.நகர் எனும் பிரம்மபுரா காந்திநகர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 15 கி.மீ., துாரத்தில் உள்ள நாகமங்களா செல்லலாம்.
தொடர்புக்கு: 94487 50603