பதிவு செய்த நாள்
29
ஏப்
2026
11:04
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன் கோயில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் குடுத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனியில் மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இவ் விழாவில் தேனி பாரட்ரோடு, சோலைமலை அய்யனார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமண கோலத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணை தலைவர் ஜீவகன், பொது செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சோமசுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். பெண் பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள் கிழங்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், கும்ப பூஜை, விசேச ஹோமங்கள் நடைபெற்றது.
காலை 8:15 மணிக்கு மாங்கல்ய பூஜை நடந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யத்தை சூடினார். கூடியிருந்த பத்தர்கள் ‘ஓம் நமச்சிவாயா’ என கோஷமிட்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பங்கேற்ற சுமங்கலி பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தை மாற்றி கொண்டனர். திருமண விருந்து நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்காளாத்தீஸ்வரர் சேவை அறக்கட்டளை மற்றும் தென் காளஹஸ்தி சேவை அறக்கட்டளை தலைவர் முருகேசன், உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் யுவராஜா, அறங்காவலர் குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திருக்கல்யாணம் கோலாகலம் பெரியகுளம்: தென்கரை காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில், சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அர்ச்சகர் ஸ்ரீராம், மாலை அணிவித்து அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் மொய் விருந்து வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு வளையல், குங்குமம், வாழைப்பழம், தேங்காய் பிரசாதம் வழங்கப்பட்டது. தென்கரை சுதந்திரவீதியில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மீனாட்சியம்மன் முன் உட்கார்ந்து புதிதாக மாங்கல்யம் மாற்றிக் கொண்டனர். வடகரை தையல் நாயகி- வைத்தியநாத கோயிலில், சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருமண விருந்து வழங்கப்பட்டது.