வால்பாறை: வால்பாறை நகர் கக்கன் காலனி மதுரைவீரன், தொட்டிமுனி திருக்கோவிலின், 76ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம், காமராஜ்நகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து திருமண சீர்வரிசையை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். காலை, 11:30 மணிக்கு மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், அன்னதானம் வழங்கபட்டது.