பதிவு செய்த நாள்
03
மே
2026
11:05
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை காட்சிகள், அழகான நீர்வீழ்ச்சிகள், காபி தோட்டங்கள் சட்டென கண் முன்னே வந்து செல்லும். இயற்கை அன்னையின் சாம்ராஜ்யம் நடக்கும் இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, கோவில்களும் உள்ளன. இதில் குழந்தை வரம் அருளும் வேணுகோபால சுவாமி கோவிலும் ஒன்றாகும்.
இயற்கை காட்சி சிக்கமகளுரு நகரின், பசவனஹள்ளி கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது, 1,200 ஆண்டுகள் பழமையானது. பிரபலமான திருத்தலமாக விளங்குகிறது. பசுமையான இயற்கை காட்சிகளின் நடுவே, கோவில் அமைந்திருப்பது, இதன் மற்றொரு சிறப்பாகும். இங்கு குடிகொண்டுள்ள வேணுகோபால சுவாமி, பூமியில் இருந்து வந்தவர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், விவசாயி ஒருவர் நிலத்தை உழும் போது, அழகான வேணுகோபால சுவாமியின் சிலை கிடைத்தது. இதை கண்டு மகிழ்ந்த கிராமத்தினர், அதே இடத்தில் சிறிதாக கோவில் கட்டி, வேணுகோபால சுவாமியை பிரதிஷ்டை செய்து, வழிபட விரும்பினர். எங்கு கோவில் கட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
அதன்பின் ஒரு காளை மாட்டின் மீது, கிருஷ்ணரின் சிலையை வைத்தனர்.
காளை எங்கு சென்று நிற்கிறதோ, அந்த இடத்தில் கோவில் கட்ட தீர்மானித்தனர். அதன்படி காளை வந்து நின்ற இடத்தில் கோவில் கட்டினர். அன்று முதல் இன்று வரை தினமும் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி உட்பட, மற்ற பண்டிகை நாட்களில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
சிறப்பு பூஜைகள் இங்குள்ள கிருஷ்ணரை வேண்டினால், விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் கிடைக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியர், வேணுகோபால சுவாமியை தரிசனம் செய்து தொட்டில் கட்டி, ஆட்டி விட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கோகுலாஷ்டமி அன்று தொட்டில் கட்டினால், விரைவில் விருப்பம் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியவுடன், குழந்தையுடன் கோவிலுக்கு வந்து, சிறப்பு பூஜைகள் நடத்துவர்.
கோவிலின் சிறப்பு பற்றி அறிந்த தமிழக, கேரள பக்தர்கள் கூகுள் மேப் பயன்படுத்தி வேணுகோபால சுவாமி கோவிலுக்கு வருகின்றனர். கர்நாடகாவின் பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.
பெங்களூரில் இருந்து, 241 கி.மீ., மைசூரில் இருந்து, 171 கி.மீ., மங்களூரில் இருந்து 149 கி.மீ., மாண்டியாவில் இருந்து 199 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. மாநிலத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.
வெளியூரில் இருந்து விமானத்தில் வர விரும்பினால், மைசூரு, பெங்களூரு அல்லது மங்களூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சிலோ அல்லது வாடகை வாகனத்திலோ வேணுகோபால சுவாமி கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 7:30 மணி வரை.