பதிவு செய்த நாள்
03
மே
2026
11:05
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் விற்பனை சந்தை உள்ளது. இந்த சந்தைக்குள் 100 ஆண்டு பழமையான பசுபதிநாத் கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ள இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால், கருவறைக்குள் ஐந்து முகங்கள் கொண்ட சிவன் சிலை அமைந்து உள்ளது.
நேபாள நாட்டின் காத்மாண்டில் உள்ள பசுபதிநாத் கோவிலிலும், இந்த கோவிலிலும் தான் ஐந்து முகங்கள் கொண்ட சிவன் சிலை இருப்பது சிறப்பம்சமாக உள்ளது. ஐந்து சிலைகளுக்கு வாமதேவா, சத்துவஜா, அஹோரா, சத்புருஷா, ஈசனியா என்ற பெயர்கள் உள்ளன.
இக்கோவிலுக்கு வந்து சிவனை தரிசித்து சென்றால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும்; திருமணம் நடக்காமல் இருப்போருக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவிலில் நாகதேவதை ரூபத்தில் சுப்பிரமணியர், கணபதி உட்படசில சுவாமிசிலைகளும் உள்ளன. கோவில் சிறியதாக இருந்தாலும், அமைதியான சூழல் பக்தர்களை கவர்ந்து இழுக்கிறது.
ஐந்து வாரம் தொடர்ந்து திங்கள்கிழமை கோவிலுக்கு சென்று, சிவன் பாதத்தில் வில்வ இலை வைத்து பூஜித்தால், உடல்நல பிரச்னைகள் பறந்து போகும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை ருத்ராபிஷேகம்; செவ்வாய் கிழமைகளில் பார்வதிதேவிக்கு சிறப்பு பூஜைகள்; சங்கடஹரசதுர்த்தி அன்று தீப பூஜை செய்கின்றனர்.
தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். துமகூரு டவுனை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பாவகடா, குப்பி, குனிகல், ஹாசன், பெங்களூரின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.