பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
தஞ்சாவூர்: அன்னப்பன்பேட்டை கிராமத்திலுள்ள சிவன் கோவிலில், சோழர் காலத்தைச் சேர்ந்த ஜேஷ்டாதேவி, நந்தி சிற்பங்களை புதிதாக தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சையிலிருந்து, பத்து கி.மீ., தூரத்தில் அன்னப்பன்பேட்டை எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் தேவாரம் பாடல்பெற்ற தென்குடித்திட்டைக்கு அருகே உள்ளது. மராட்டியர் காலத்தில் தஞ்சை நகரின் வடக்குவாசல் பகுதியில் இயங்கிய சிரேயஸ் சத்திரத்தில், உணவு வழங்க அன்னப்பன்பேட்டையிலுள்ள வயல்களில் விளைந்த நெல்களையே அனுப்பியுள்ளனர். அதனாலேயே இந்த கிராமத்துக்கு அன்னப்பன்பேட்டை எனும் பெயர் வந்துள்ளது. அன்னப்பன்பேட்டைக்கு தஞ்சை ஆய்வுக்குழுவினர், சரஸ்வதி நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன், கரந்தை மனோகரன் ஆகியோர் நேரில் சென்று, ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்கு அதேபகுதியைச் சேர்ந்த நிலக்கிழார்கள் புண்ணியமூர்த்தி, சுந்தரவதனம், ராஜசேகர் ஆகியோர் உதவி செய்தனர். இந்த ஆய்வில், தஞ்சையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சோழர்கள் காலத்தைச் (11ம் நூற்றாண்டு) சேர்ந்த ஜேஷ்டாதேவி, நந்தி சிற்பங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் மணிமாறன், மனோகரன் ஆகியோர் கூறியதாவது: தஞ்சையை அடுத்த அன்னப்பன்பேட்டையிலுள்ள சிவன் கோவிலை கிராமத்தினர் தற்போது சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த ஜேஷ்டாதேவி படைப்பு சிற்பம் ஒன்றை கண்டோம். ஜேஷ்டா என்றால் ஸ்ரீதேவிக்கு மூத்த தேவியை குறிப்பிடும். மூத்ததேவி தான், பின்னர் பேச்சுவழக்கில் மூதேவி என, மருவி விட்டது. இந்த ஜேஷ்டாதேவி சிற்பம், ஒரே கல்லில் அமைந்து, அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளித்தது. சிற்பத்தின் தலை பாகம் சிதைந்த நிலையிலுள்ளது. வலதுபுறம் மனித உடலும், காளையின் தலையும் கொண்டுள்ளது. ஜேஷ்டாதேவியின் மகன் விருஷபனின் உருவமும், இடப்புறம் மகள் நமனையின் உருவமும் உள்ளது. சிதைவுற்ற சிவன் கோவிலிருந்த நந்தி சிற்பம் அருகேயுள்ள மற்றொரு கோவிலில், தற்போது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இடிந்த சிவன்கோவில் கருவறையில் சோழர் கால சிவலிங்கம் இன்னும் நல்லநிலையில் காணப்படுகிறது. அன்னப்பன்பேட்டை கிராமத்தின் கிழக்கு திசையில் சிறிய மண்டபத்தில் தாயுமானவர் சிற்பம் உள்ளது. தாயுமானவர் மகன் கனகசபாபதி பிள்ளை இந்த கிராமத்தில் தான் தங்கியிருந்துள்ளார். அவரின் வழித்தோன்றல்கள், இன்றைக்கும் தாயுமானவர் சிற்பத்தை வழிபட்டு வருகின்றனர். இதே ஊரிலுள்ள மாரியம்மன் கோவிலில் மாணிக்கவாசகர் ஓவியம் காணப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தியன்று, பக்த பிரகலாதன் நாடகம், அவ்வூர் மக்களை கொண்டே நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அரிச்சந்திரன் நாடகம் தற்போதும் நடத்தப்படுவது சிறப்பு. இதன்படி, அன்னப்பன்பேட்டை கிராமத்துக்கு, ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்பட தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.