பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இவ்விழாக்களில் தைப்பூசத்திருவிழாவும் ஒன்றாகும். தைப்பூசத்திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வர். இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று திருச் செந்தூரில் கோலாகலமாக நடந்தது. தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்தனர். இந்தாண்டு பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கோயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் மற்றும் சுவாமி கடலில் நீராடும் தீர்த்தவாரியும் நடந்தது. மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று அங்க வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோயிலை சேர்ந்தார். இந்தாண்டு கடந்த ஆண்டை விட லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் குழுக்களாக பஜனை பாடியும், கடற்கரை மற்றும் கோவில் வளாகங்களில் பூஜை செய்து வழிபட்டனர். இதனால் கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோயிலுக்குள் செல்ல பல மணிநேரம் வரி சையில் காத்திருக்கவேண்டிய அளவுக்கு கூட்டம் அலைமோதியதால் ஏராளமான பக்தர்கள் கடற்கரை மற்றும் கோயில் வாசலில் தேங்காய், பழம் உடைத்து முருகனை வழிபட்டு சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார்கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.ஞானசேகரன் இன்ஸ்பெக்டர்கள் தில்லைநாகராஜன், பிரதாபன், பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் ஈடுபட்டனர். போதிய பஸ் வசதி இல்லை பக்தர்கள் அவதி: பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு தகுந்தவாறு போதிய அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் பஸ்களில் ஏறுவதற்கு முறையான கியுவசதி செய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் குழந்தைகளும், முதியோர்களும் பெரிதும் சிறமப்பட்டனர். போதிய அளவு போலீசார் இல்லாததால் நாழிக்கிணறு பஸ்ஸ்டாண்ட் வரும் ரோடு மற்றும் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தூண்டுகை விநாயகர் கோயில் அருகில் பக்தர்களின் கூட்டத்தை போலீசார் முறைபடுத்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் அளகு குத்திவந்த பக்தர்கள் பெரிதும் சிறமப்பட்டனர். குடிதண்ணீர் போதிய அளவு இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் வரும் விழாக்காலங்களில் கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பு வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.