பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
அலகாபாத்: நீர்நிலைகளை தெய்வமாக கருதி வழிபடும் மனநிலை,உலகம் முழுவதும் இருந்துள்ளது. ரிக் வேதம் துவங்கி, பாரதி வரை நமது மண்ணிலும் அந்த வழிபாட்டு நீட்சியை காண முடியும். கும்பமேளாக்களில் கலந்து கொண்டு அங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால், பாவம் நீங்கும் என்ற நம்பிக்கை உருவானது. இத்தகைய சிறப்பு மிக்க கும்பமேளாவில் தை பவுர்ணமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் எராளமான பக்தைகள் நீராடி வழிபாடு செய்தனர்.
வெளியேறியசுவாமி சொரூபானந்தா சமாதானம்: சங்கராச்சாரியார்களுக்கு புனித நீராட தனியிடம் ஒதுக்காததை கண்டித்து, அலகாபாத்திலிருந்து கோபத்துடன் வெளியேறிய துவாரகா பீட சங்கராச்சாரியார், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி, மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளார்.ஆதி சங்கரர் ஏற்படுத்திய, நான்கு பீடங்களின் மடாதிபதிகளுக்கு, மகா கும்பமேளாவின் போது நீராட, அருகருகே இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார், துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார், சொரூபானந்த சரஸ்வதி சுவாமி. அவ்வாறு புதிய மரபை ஏற்படுத்த முடியாது என, உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிர்வாகம் கூறியதால், கோபம் கொண்ட சொரூபானந்தா, அலகாபாத்திலிருந்து, டிச., 30ம் தேதி வெளியேறி, மத்திய பிரதேசம் சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்த, அலகாபாத் எம்.எல்.ஏ., அஜய்குமாரை, முதல்வர், அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும், "மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற, தன் தனிப்பட்ட வேண்டுகோள் கடிதத்தையும், முதல்வர், அகிலேஷ் அனுப்பி வைத்திருந்தார்.அவற்றை பெற்ற சொரூபானந்த சுவாமி, கும்பமேளாவில் கலந்து கொள்ள உறுதியளித்தார். அடுத்த மாதம், 1ம் தேதி, அலகாபாத்தில் புனித நீராட உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.இதனால், இரண்டு மாதங்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.