பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு தைப்பூச திருவிழாவிற்கு கடந்த 18ந்தேதி கொடியேற்றம் நடந்தது. முன்னதாக ராஜஅநுக்கை மற்றும் தேவ அநுக்கை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் 2ம் திருநாளன்று பூத வாகனத்திலும், 3ம் திருநாளன்று அன்னவாகனத்திலும், 4ம் திருநாளன்று வெள்ளியானை வாகனத்திலும், 6ம் திருநாளன்று காளை வாகனத்தில் சோமஸ்கந்தரும், முருகன் ஆட்டுக்கடா வாகனத்திலும் திருவீதி உலா நடந்தது. மேலும் 7ம் திருநாளன்று ஸ்ரீசண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சண்முக அர்ச்சனையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர்சூடி ருத்திரர் அதாவது சிவன் அம்சமாகவும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை மலர்சூடி அலங்காரம் செய்யப்பட்டு பிரம்மன் அம்சமாகவும், அதிகாலை 5 மணிக்கு பச்சை மலர்சூடி அலங்காரம் செய்யப்பட்டு திருமால் அம்சமாகவும் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து 8 மற்றும் 9ம் திருநாளன்று மயில் வாகனத்திலும் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து நேற்று தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 10ம் திருநாளன்று சுவாமி சட்டரதத்தில் எழுந்தளி காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து கழுகுமலை டவுண் பஞ்., தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து விண்ணைப்பிளக்கும் பக்தர்களின் முருக கோஷத்துடன் கழுகுமலை நகரின் நான்கு ரதவீதிகளில் தேர் வலம் வந்தது. மேலும் இரவில் இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இந்நிலையில் இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவில் கழுகாசலமூர்த்தி கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி, பவுர்ணமி கிரிவலக்குழு தலை வர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை கோயில் நிர்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையில் போலீசாரும் செய்திருந்தனர்.