பதிவு செய்த நாள்
21
ஜூலை
2026
10:07
பெங்களூரில், நுாற்றாண்டு பழமையான கோவில்கள் பல உள்ளன. நகரில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் முக்கியமானதாகும். இது மிகவும் அழகான கட்டமைப்பு கொண்டதாகும். இது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கோவில்.
பெங்களூரின், பேலஸ் குட்டஹள்ளியில் லட்சுமி வெங்கடேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த 1964ல், மலை மீது கட்டப்பட்டது. இந்த கோவில் ஆந்திராவின் பிரசித்தி பெற்ற, திருப்பதி கோவிலை போன்ற தோற்றத்தில் இருப்பது, மற்றொரு சிறப்பாகும்.
கோவில் அமைந்துள்ள மலையில், பிருகு ரிஷி தவம் செய்ததாக ஐதீகம். கோவிலில் குடிகொண்டுள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமியை, முன் கதவு வழியாக பார்க்காமல், ஆறு ஓட்டைகள் உள்ள ஜன்னல் வழியாக தரிசிக்க வேண்டும். பக்தர்கள் தங்களின் அகங்காரத்தை விட்டொழித்து, கடவுளை தரிசிக்க வேண்டும் என்பதே, இதன் நோக்கமாகும்.
கோவிலின் பக்கத்தில் உள்ள, மற்றொரு மலை மீது லட்சுமி மற்றும் பத்மாவதி தேவியின் ஆலயம் உள்ளது. லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி மற்றும் லட்சுமி, பத்மாவதியை தரிசித்தால் குடும்பத்தில், தம்பதிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவர்.
கோவிலின் சிறப்பை அறிந்து, வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் ஸ்ரீராம நவமி, நவராத்திரி உட்பட, அனைத்து பண்டிகைகளும் மிக சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. ஆண்டுதோறும் திருவிழாவும் நடக்கிறது. இது திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற தோற்றத்தில் காட்சி அளிப்பதால், பங்காரு திருப்பதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
எப்படி செல்வது?
* எலஹங்காவில் இருந்து, 21 கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து, ஏழு கி.மீ., மெஜஸ்டிக்கில் இருந்து ஆறு கி.மீ., மல்லேஸ்வரத்தில் இருந்து, ஏழு கி.மீ., தொலைவில் குட்டதஹள்ளி உள்ளது. இங்கிருந்து 11 கி.மீ., தொலைவில் லட்சுமி வெங்கடேஷ்வரா கோவில் உள்ளது.
* பெங்களூரின் முக்கிய பகுதிகளில் இருந்து, பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை கார், ஆட்டோ வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனங்களில், கோவிலுக்கு செல்லலாம்.
* தரிசன நேரம்: காலை 6:30 மணி முதல், மதியம் 12:00 மணி வரை. மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.