பதிவு செய்த நாள்
24
ஜூலை
2026
11:07
ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் ஞான சக்தி சொரூபமான வடிவுடையம்மனை, ஆடிப்பூர வளைகாப்பு வைபத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தால், குழந்தை பேறு நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோவிலின், தெற்கு முகம் நோக்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவுடையம்மன், தன்னை வழிபடும் பக்தர்களை, ஞானமும், அதிக அறிவுடையவர்களாக திகழ செய்கிறார்.
சிவ ஸ்தலமாக விளங்கினாலும், அம்பிகை வடிவுடையம்மன் தனிசிறப்புடன் விளங்குகிறார். புரட்டாசி மாதம், 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா விஷேசம். கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த வைபவத்தில், உற்சவ தாயார், விழா நாட்களில்,நந்தினி, கவுரி, பராசக்தி, ராஜ ராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, தபசு, சரஸ்வதி, மீனாட்சி அலங்காரங்களில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் காண்பார்.
வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசரிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். ஆடி வெள்ளியில் அம்மனை தரிசிக்க, அத்தனையும் கிட்டும் என்பது ஐதீகம். இங்கு அம்பிகைக்கு ஆடிப்பூர வளைகாப்பு வைபவம் வெகு விமரிசையாக அரங்கேறும். உற்சவ தாயார், விஷேச அலங்காரத்தில், பல வண்ண வளையல்களால் ஜோடிக்கப்பட்ட வசந்தமண்டப ஊஞ்சலில் எழுந்தருள்வார்.
பின், 16 வகையான முளைகட்டிய தானியங்கள், திண்பண்டங்கள் அடங்கிய மூட்டை, அம்மன் வயிற்றில் கட்டிவிடப்படும். தொடர்ந்து, தாயாருக்கு வண்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு வைபவம் நடைபெறும்.
இந்த வளைகாப்பு வைபவத்தில் பங்கேற்று, வடிவுடையம்மனை கண் குளிர தரிசித்தால், குழந்தை பேறு வேண்டியவர்களுக்கு நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும், குடும்ப ஒற்றுமை, தொழில் விருத்தி, படிப்பில் முன்னேற்றம், செல்வம் என, அனைத்து ஐஸ்வர்யங்களையும் குறைவின்றி வாரி வழங்குகிறார் அம்பிகை.
இந்தாண்டு, ஆக., 14 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, வடிவுடையம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு வைபவம் நடக்கிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.