பதிவு செய்த நாள்
31
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: திருவையாறு, தியாகராஜர், 166வது ஆராதனை விழாவில், பிரபல இசைக்கலைஞர், பாடகர்கள் ஒரே மேடையில் பங்கேற்று, பாடல், தவில், நாதஸ்வரம், வயலின் என, பலவித இசையை, ரசிகர்களுக்கு விருந்தாக்கினர். தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜர் ஸ்வாமியின், 166வது ஆராதனை விழா கடந்த, 27ம் தேதி துவங்கியது. இதில், சாதாரண குழுவுக்கும், கலைஞர்களுக்கும், 10 நிமிடமும், பிரபல பாடகர்களுக்கு, 20 நிமிடமும் நேரம் ஒதுக்கியிருந்தனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருவையாறு திருத்தலம் குறித்து, தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளை வானதி சிவக்குமார் பாடியது, பார்வையார்களை கவர்ந்தது. தொடர்ந்து, திருக்கருகாவூர் சகோதாரர்கள் ரமணன், சரவணன் நாதஸ்வரம் மற்றும் கோட்டூர் வீராச்சாமி, தாராசுரம் சாமிநாதன் நாதஸ்வரம் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இதயங்களை பறிகொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த தினங்களில் பிரபல பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், காயத்ரி, அமரர் டி.கே.ஜெயராமனின் சீடர் சங்கீத விஜயசிவா உள்பட பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் மீட்டிய இசை ராகங்கள், விழா அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் உள்ளங்களுக்கு இசை விருந்து அளித்தன. நேற்று, நான்காவது நாளாக இசை ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. காலை, 9 மணிக்கு கிருஷ்ணகிரி பாரத், அசோக் நாதஸ்வரம் வாசித்தும், சுப்பிரமணியன், செந்தில் தவில் வாசித்தும் நிகழ்வை துவக்கினர். தொடர்ந்து, 10, 15, 20 நிமிடங்கள் என அடுத்தடுத்து குழுவினர் மேடையேறி, இடைவெளியின்றி இசை நிகழ்ச்சிகளை இரவு வரை நடத்தினர். இதில், வடுவூர் சகோதரிகள் பத்மஜா, காயத்ரி, திருச்சி அமிர்தவர்ஷினி குழுவினர் பாட்டு, வில்லிவாக்கம் பாலமுருகன் வயலின், அண்ணாமலை பல்கலை மாணவர்கள் சுரேஷ், உதயசங்கர் நாதஸ்வரம் உள்பட பலர் பங்கேற்றனர். நேற்று காலை பிரபல பாடகர் ஜேசுதாஸ் பாட்டுப்பாடி, தியாராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, தியாகராஜர் ஸ்வாமிகள் முக்தி அடைந்த தினமான இன்று ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் பஞ்சரத்ன கீர்த்தனை நடக்கிறது. இதில், கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று, பிரமாண்டமான இசை விருந்து படைக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா நிர்வாகிகள் செய்துள்ளனர். * தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.