பதிவு செய்த நாள்
11
ஆக
2026
11:08
சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபண்டே அருகில் உள்ள எல்லோடு கிராமத்தில் சிறிய மலையின் மீது ஸ்ரீ லட்சுமி ஆதிநாராயண சுவாமி கோவில் அமைந்து உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இப்புனிதமான கோவில், ஆமை வடிவிலான மலையின் மீது அமைந்துள்ளது. சுயம்புவாக தோன்றிய ஸ்ரீ லட்சுமி ஆதி நாராயண சுவாமியை, 10 ஆயிரம் குடும்பத்தினர், தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
சுவாமியை தரிசிக்க, மலை அடிவாரத்தில் இருந்து 618 படிக்கட்டுகள் வழியாக ஏறி செல்ல வேண்டும். ஏறும்போது இருபுறமும் பசுமையை கண்டு ரசித்தபடி செல்லலாம். புராணங்கள்படி, கூர்ம துறவி, விஷ்ணுவை நினைத்து தியானம் மேற்கொண்டார். இவரின் தியானத்தால், துறவி முன் விஷ்ணு தோன்றினார். அப்போது துறவி, உலக மக்கள் நன்மைக்காக தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும்’ என்று கேட்டு கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட விஷ்ணு, ஆதி நாராயணனாக இங்கு குடிகொண்டார்.
‘ஆதி’ என்பது துவக்கம், முதல் மற்றும் மூலம் என்பதாகும். நாராயணன் முழு படைப்பிலும் அகமாகவும், புறமாகவும் வியாபித்திருந்ததால், அவர் விஷ்ணு என்று அறியப்பட்டார். கன்னடத்தில் மகா மாதத்தில் (தமிழில் மாசி மாதம்) அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாவது ஞாயிற்று கிழமை ரத உத்சவம் நடக்கும். இந்த உத்சவத்தை காண, 10 ஆயிரம் குடும்பத்தினர் இங்கு ஒன்று கூடுவர்.
வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும். பவுர்ணமி நாட்களில் கோவிலில் சத்யநாராயண சுவாமி பூஜை நடத்தப்படும். கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில், கல்யாண உத்சவம் நடக்கும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், சுவாமிக்கு தலைமுடி காணிக்கையாக வழங்குகின்றனர்.
* ரயிலில் செல்வோர், சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 55 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
* பஸ்சில் செல்வோர், சிக்கபல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்கி, 54 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
* கோவில் திறப்பு: வார நாட்களில் காலை 8:30 முதல் மதியம் 1:00 மணி வரை; சனிக்கிழமைகளில் காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை; ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை.
* தொடர்புக்கு: 08156261250