பதிவு செய்த நாள்
04
பிப்
2013
11:02
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னபேடு கிராமத்தில் அமைந்து உள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். கோவில் மூலவரின் வலபுறம், வள்ளிநங்கை, மணவாளப் பெருமான் முருகனைக் கைத்தலம் பற்றும் திருமணக் காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார். மணக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகப் பெருமானை, மனதார வணங்குபவர்களுக்கு, திருமணத் தடை நீங்கி, மனம்போல் துணை அமையும் என்பது ஐதிகம். இதனால், இக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சோழவரம் வட்டார, சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்த ஜன சங்கம் சார்பில், 4ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று, கோவில் பிரதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காலை, 8:00 மணிக்கு துவங்கிய திருக்கல்யாணம், மதியம், 12:00 மணிக்கு முடிந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருமண கோலத்தில் காட்சியளித்த வள்ளி, மணவாளனை மனம் உருக வேண்டினர். அதன் பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.