பதிவு செய்த நாள்
08
பிப்
2013
11:02
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் மலை கோவிலின், கிரிவலப்பாதை நெடுஞ்சாலையில் செல்வதால், அப்பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றத்தில், நான்கு வேதங்களால் உருவான மலையில், வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதால் இங்கு, பௌர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மலையை சுற்றும், கிரிவலப்பாதை ஒரு பகுதி மாமல்லபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பௌர்ணமி நாளில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்கள், கூட்டமாக நெடுஞ்சாலைக்கு வரும் நேரத்தில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நெடுஞ்சாலை என்பதால் இதில், வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால், பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் செல்லும் கிரிவலப்பாதை, 200 மீட்டர் அளவிற்கு, நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப் பகுதியில், அதிக கடைகள் அமைந்துள்ளதால், எப்போதும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால், இப்பகுதி நெடுஞ்சாலையும் அகலமாக காணப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் வசதிக்காக மேற்கூறிய பகுதியில், நடைபாதை அமைக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.