அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள மகா நகரில் ஸ்ரீ தேவி வாகன கலைக்கூடம் நடத்தி வருபவர் அங்கு ராஜ் 52. மூன்று தலைமுறைகளாக,கோவிலில் உள்ள உற்சவர்கள் திருவீதி உலா வரும் சப்பரத்தில் உள்ள வாகனங்களை செய்து வரும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கோவை, ஈரோடு,நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சப்பரத்தில் வைக்கப்படும் வாகனங்களை செய்து வரும் ஒரே கலைக்கூடம் இவர்களது மட்டுமே. அந்த வகையில் கோவை மாவட்டம், சூலூர் அருகே கிட்டாம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் மற்றும் திருப்பூர் அருகே வாவிபாளையம் ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றுக்கு கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடந்த மூன்று மாத காலமாக கஜமுக சூரன்,சிங்கமுகம்,பானுகோபன், சூரபத்மன் ஆகிய சூரர் வாகனங்களை செய்து அனுப்பியுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சூரர் வாகனங்கள் அனைத்தும் மூங்கில் மற்றும் சணல் பைகள் கொண்டு செய்யப்பட்டவை ஆகும். சூரர்களின் தலை காகிதம்,துணி மற்றும் சணல் பை ஆகியவற்றை கூழாக்கி அச்சில் வார்த்து எடுத்து செய்கின்றனர். இதுவரை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோவில்,குமரன் குன்று,திருமுருகன் பூண்டி, கயித்த மலை, ஊத்துக்குளி முருகர் கோவில்,திருப்பூர் ஈஸ்வரன் கோவில் மற்றும் பல கோவில்களுக்கு வாகனங்கள் செய்து கொடுத்துள்ளதாக அங்குராஜ் கூறினார்.