திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா நிறைவு : சட்டதேரில் சுவாமி உலா
பதிவு செய்த நாள்
16
நவ 2026 04:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா நிறைவு தேரோட்டமும், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றமும் நடந்தது. தேரோட்டம்: காலை 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டதேரில் எழுந்தருளினார். நவ. 10முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது. கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர். பாவாடை நைவேதனம்: மாலை 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியினால் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு அதன் மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை தரிசனம் நடந்தது. மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியானது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள் பாலித்தனர். அறங்காவலர் குழு தலைவர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் செல்வி திருவிழா ஏற்பாடுகள் செய்தனர். கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்: இன்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடி கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 7:20 மணிக்கு கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பட்டு துணி, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடி கம்பத்தில் கட்டப்பட்டு அடிப்பாகத்தில் பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. சுவாமி வீதி உலா: இன்று முதல் நவ. 25வரை தினம் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, காமதேனு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை: திருவிழா 6ம் நாளான நவ. 21ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, நவ. 22 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். மகா தீபம்: நவ. 23காலையில் நடராஜர், சிவகாசி அம்மன் புறப்பாடு, இரவு 7:15 மணிக்கு பட்டாபிஷேகம், நவ. 24 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மஹா தீபம், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி, நவ. 25ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
|