பதிவு செய்த நாள்
18
நவ
2026
11:11
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கடந்த 15ஆம் தேதி நடந்த கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, நேற்று முன் தினம் மாலை 7 மணி அளவில் விக்னேஷ்வரபூஜை,யாகசால பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் வள்ளி,தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு சகஸ்ர நாம அர்ச்சனையும்,திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
இதில் சுற்று பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு உற்சவமூர்த்திகள் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீரவாகுத் தேவர்கள் காப்பு களையும் நிகழ்ச்சியும்,தீபாரதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல், சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன்,அனந்தராமன் கவுரிசங்கர்,உபயதாரர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவ பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹாரம் விழா, நவ.10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து 5ம் நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கணபதி பூஜை, சுப்பிரமணிய ஹோமம் நடத்தி, வள்ளி, தெய்வானை சமேத செந்தில் ஆண்டவ பெருமான் உற்சவமூர்த்திகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. வைபவத்தினை அம்பிகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் ஏமப்பேர் விஸ்வநாதர், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், இந்திலி பாலமுருகன், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர் கோவில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தன.
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் , வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கடந்த 10ம் தேதி கொடியேற்றம், நவவீரர்கள் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் உற்சவர் சுப்ரமணிய சுவாமி வீதியுலாவும், கடந்த 13ம் தேதி பச்சை போடுதல், 14ம் தேதி கம்பம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
கடந்த 15ம் தேதி சூரசம்ஹார விழாவும் விமர்சையாக நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை பால்குடம் எடுத்தல், சாந்தாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் செய்தனர். விழாவின் கடைசி நாளான நேற்று இடும்பன் பூஜை நடந்தது.