பதிவு செய்த நாள்
22
நவ
2026
01:11
பல்லடம்: வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில், க்யூ ஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பல்லடத்தை அடுத்த, சாமளாபுரத்தில், பிரசித்தி பெற்ற வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், நுாற்றாண்டு வாய்ந்தது. அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விஷேட நாட்கள் மற்றும் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலில் கூடுவது வழக்கம்.
கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், அர்ச்சனை, தேங்காய், பழம் உள்ளிட்டவற்றுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, ‘க்யூஆர் கோடு’ முறையில் பணம் செலுத்தும் வசதி கோவிலில் செய்யப்படவில்லை. இதனால், சில்லரை தட்டுப்பாடு ஏற்படுகிறது. இன்று அனைத்து துறையிலும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சூழலில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில், ‘க்யூ ஆர் கோடு’ முறையில் பணம் செலுத்தும் வசதி இன்னும் ஏற்படுத்தாதது, பக்தர்கள் மத்தியில் கவலையை அளிப்பதாக உள்ளது. உடனடியாக, இக்கோவிலில் க்யூ ஆர் கோடு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விரைவில் வசதி
இது குறித்து கோவில் உதவி கமிஷனர் பிரபாகரனிடம் கேட்டதற்கு, ‘‘தேங்காய், பழம், பால், அர்ச்சனை உள்ளிட்டவற்றுக்காக கட்டணம் வசூலிக்கப்படும்போது, ஒவ்வொரு குறிப்பிட்ட தொகையும் எதற்காக வசூலிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், கணக்கிடும் வசதி இன்னும் செய்யப்படவில்லை. இருப்பினும், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ‘க்யூ ஆர் கோடு’ முறையை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றார்.