பதிவு செய்த நாள்
16
பிப்
2013
11:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக உற்வசம் இன்று, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை விருத்தகிரீஸ்வரர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. காலை 11:45 மணிக்கு மேல் பகல் 1:00 மணிக்குள் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்திலுள்ள ஐந்து கொடி மரங்களிலும் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாசிமக உற்சவத்தையொட்டி தினமும், காலை பல்லக்கிலும், இரவு அலங்கரித்த வாகனங்களிலும் விருத்தகிரீஸ்வரர் சமேத கோலத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, ஆறாம் நாள் நிகழ்ச்சியாக 21ம் தேதி காலை 11:45 மணிக்கு மேல் பகல் 1:00 மணிக்குள் விபசித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், வெள்ளி ரிஷப வாகனத்தில் விருத்தகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 24ம் தேதி பஞ்சமூர்த்திகளின் தேர்த்திருவிழா உற்சவம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சம்பத் தலைமையில் நடக்கிறது. 25ம் தேதி மாசிமகத்தில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி அம்மன் குளத்தில் தெப்பல் திருவிழா உற்சவம், விருத்தாசலம் நகராட்சி சார்பில் நடக்கிறது. இரவு புஷ்ப வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 27ம் தேதி சண்டிகேசுவரர் உற்சவத்துடன், மாசிமக உற்சவம் நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.