பதிவு செய்த நாள்
28
பிப்
2013
11:02
தர்மபுரி: தர்மபுரி அருகே பழமையான ஈஸ்வரன் கோவில் பாழடைந்து வருகிறது. இக்கோவிலை புனரமைப்பு செய்து, பூஜைகள் நடத்த ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட சிவாடி பஞ்சாயத்து, கந்துகால்பட்டி கிராமத்தில் பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில், 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், ராஜராஜசோழ மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இக்கோவிலில் கடந்த காலங்களில் ஊர் மக்கள் சார்பில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதோடு, கோவிலுக்கு நேர் எதிரில் முனிஸ்வரன் கோவில் உள்ளது. தற்போது, இக்கோவில்கள் ஹிந்து அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலில் திருவிழா மற்றும் பூஜைகள் செய்ய மானிய நிலங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, மானிய நிலங்கள் குறித்த விபரங்கள் எதுவும் மக்களுக்கு தெரியவில்லை. இக்கோவில் முன் தெப்ப குளம் ஒன்று உள்ளது. கோவிலை சுற்றிலும் ஸ்தூபிகளும், பழங்கால மன்னர்களின் ஆட்சி திறமைகளை வெளிகாட்டும் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போதும், கடந்த பல ஆண்டாய் கோவில் பராமரிப்பு இல்லாமல், கருவரை கோபுரங்கள் இடிந்தும், சேதம் அடைந்தும், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து பாழடைந்த நிலையில் உள்ளது.
ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் உள்ள பார்வதி சன்னதி முற்றிலும் சேதம் அடைந்து, கோவில் கருவறை கோபுரத்தில் மரம், செடிகள் வளர்ந்த நிலையில் பாழ்பட்டு உள்ளது. 16ம் நூற்றாண்டின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கிய கோவில் கட்டிட கலைகள் வெளியில் தெரியாத வண்ணம் சேதம் அடைந்து, பாழ்பட்டு நிற்கிறது. இக்கோவிலில் ஈஸ்வரனை வணங்குவோருக்கு அனைத்து வேண்டுதல்களும், 106 நாட்களில் நிறைவேறும் என்பதும், நோய் வாய்ப்பட்டவர்கள், விபத்துக்களில் சிக்கி காயம் அடைவோர் இக்கோவிலுக்கு வடக்கு திசையில் உள்ள அதியமான்கோட்டை காலபைரவரை வணங்கி, முத்தம்பட்டி ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி, இறுதியில் ஈஸ்வரன் கோவிலில் ஸ்வாமியை வழிபட்டால், நோய்கள் குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இங்கு நாக தேவதை, நந்தி பெருமானும் கோவிலுக்கு வெளியில் உள்ளனர். வரலாற்று சான்றுகளை கொண்ட இக்கோவில் பராமரிப்பு இன்றி பாழ்பட்டு வருவதோடு, கோவிலுக்கு முன் உள்ள தெப்ப குளம் மூடப்பட்டும், ஸ்தூபிகள் மண்ணில் புதைந்தும் காணப்படுகிறது. கோவிலை சுற்றியுள்ள நிலங்களும் எந்த பயன்பாடும் இல்லாமல் தரிசு நிலங்களாக உள்ளன. இக்கோவிலில் அப்பகுதியில் உள்ள மக்கள் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வந்து பூஜைகள் செய்து செல்கின்றனர். பழமையான இக்கோவிலை ஹிந்து அறநிலையத்துறை சீர் செய்து, தொடர்ந்து பூஜைகள் நடத்தவும், கோவிலுக்கு சொந்தமான மானிய நிலங்களை கண்டறிந்து, வருவாயை பெருக்கி பூஜைகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் எதிர்பார்க்கின்றனர்.