பதிவு செய்த நாள்
28
பிப்
2013
11:02
ராசிபுரம்: உரம்பு வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துக்கு நடுவே, திருத்தேர் வடம்பிடித்து இழுத்துவரப்பட்டது. நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் உரம்பு கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்திற்கு மறுநாள், தேரோட்டம் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், குண்டம் இறங்கும் விழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருமணக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து, கோவிந்தா கோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. கோவிலைச் சுற்றி பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்த இழுத்து வந்தனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பெற்றோர்கள், குழந்தைகளின் எடைக்கு எடை காசு, கற்கண்டு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினர். ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாள் மட்டும் நடக்கும் தேரோட்ட நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.