பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர், பங்காரு அடிகளாரின், 73வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. செவ்வாடை பக்தர்கள், விழாவில் ஏராளமாக பங்கேற்றனர். இம்மாதம் 1ம் தேதி, பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த, ஆன்மிக ஜோதியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தொடர்ந்து கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது. மூன்று நாட்களும், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், 1,158 பேர் பயனடைந்தனர்.நேற்று, காலை 7:00 மணிக்கு, பங்காரு அடிகளார் குடும்பத்துடன் சித்தர்பீடம் சென்றார். மேல்மருவத்தூர் கோவில் கருவறையிலும், புற்று மண்டபத்திலும் தீபாராதனை காட்டி வழிபட்ட பின், 73 கிலோ கேக்கை வெட்டி, பிறந்த நாள் விழா கொண்டாடினார். தொடர்ந்து, பிறந்தநாள் விழா மலரை, பங்காரு அடிகளார் வெளியிட்டார். தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் தணிகாசலம் பெற்று கொண்டார். மேலும், ஐந்து ஜோடிகளுக்கு, இலவச திருமணங்களையும், ஐந்து ஜோடிகளுக்கு, மணிவிழாவும், 80 வயது நிறைவடைந்த தம்பதிக்கு, சதாபிஷேகமும் செய்து வைக்கப்பட்டன.