பதிவு செய்த நாள்
07
மார்
2013
10:03
சென்னை: தமிழக கோவில்களில் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை, திருவிளக்கு பூஜை ஆகியவற்றை, தனியார் அமைப்புகள் நடத்த அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 34,652 கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறையின் சார்பில் கோவில்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கோவில்களில் நடத்தப் படும் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை சரியான முறையில் செயல்படுத்தப் படவில்லை என்ற குறை, பக்தர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே, லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனைகளை கோவில் நிர்வாகத்தின் மூலமே செயல்படுத்த வேண்டும். தனிப்பட்ட மனிதர்கள், அமைப்புகள் மூலம் இது போன்ற வழிபாடு செய்ய அனுமதிப்பது, பல்வேறு புகார்களுக்கு இடமளிக்கிறது. லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனைகளில், தலா மூன்று திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் விவரம்:
திட்டம் 1: அனைத்து கோவில்களிலும், 150 ரூபாய் கட்டண திட்டத்தில் பக்தர்களுக்கு தேங்காய் ஒன்று, பழம் இரண்டு, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி இரண்டு, வில்வம், விபூதி, குங்குமம், லட்டு, 100 கிராம் ஒன்று அல்லது சர்க்கரை பொங்கல் பிரசாதம், பூச்சரம், எவர்சில்வர் டிபன் பாக்ஸ், கோவில் துணிப்பை வழங்கப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அர்ச்சகருக்கு, 10 ரூபாய் வழங்கப்படுகிறது.
திட்டம் 2: இத்திட்டத்துக்கு, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. முதல் திட்டத்தில் உள்ள பொருட்களுடன், கூடுதலாக, 50 கிராம் எடை கொண்ட முறுக்கு ஒன்று, வடை ஒன்று, 25 கிராம் எடை கொண்ட அதிரசம் ஒன்று அல்லது சர்க்கரை பொங்கல், சுவாமி, அம்பாள் லேமினேஷன் செய்யப்பட்ட படம் இரண்டு ஆகியன வழங்கப்படும்.
திட்டம் 3: இத்திட்டத்தில், 400 ரூபாய்க்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கு பெறும் பக்தர்களுக்கு வெள்ளி டாலர் வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்ட பொருட்களுடன் கூடுதலாக சுவாமி, அம்பாள் உருவம் பொறித்த, 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களை கோடி அர்ச்சனை திட்டத்துக்கும் செயல் படுத்த வேண்டும். இதில் மாற்றம் செய்ய நேரும் பட்சத்தில், அது குறித்து தனி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து கோவில்களிலும் திருவிளக்கு பூஜை நடத்தப்படுவதை கோவில் நிர்வாகத்தின் மூலமே நடத்த பக்தர்கள் விரும்புகின்றனர். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற பூஜைகள் நடைபெறும் வகையில் செயல் அலுவலர்கள், தக்கார், அறங்காவலர்கள் ஆகியோருக்கு விவர மளித்து கண்காணிக்க வேண்டும். இந்நிகழ்வுகளை அவ்வப்போது கமிஷனர் அலுவலகத்திற்கு தகவலுக்காக தெரிவிக்க வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தையும், தமிழ் புத்தாண்டு தினமான, சித்திரை 1 முதல், அமல்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.