பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில், பிரசித்திப்பெற்ற, குட்டிக்குடி திருவிழாவில், பலி கொடுக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார். திருச்சி உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆகிய, மூன்று ஆறுகள் சங்கமிக்கும், ஆறுகண் கலிங்கி அருகே, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், "குட்டிக்குடித்தல் திருவிழா பிரசித்திப்பெற்றது. நடப்பாண்டு திருவிழா, கடந்த, 20ம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. கடந்த, 5ம் தேதி இரவு, காளி ஓட்டத்தையொட்டி, வண்ணாரப்பேட்டையிலிருந்து தப்பு, தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டு, நள்ளிரவில் அம்மனை அழைத்து வந்து பதுவு கோவிலில் வைத்தனர். அதைத்தொடர்ந்து, அம்மன் காளி ஓட்டமாக, தென்னை ஓலை, வெட்டிவேர் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், நேற்று முன்தினம் இரவு, வீதியுலா வந்தார். உறையூர், புத்தூர், தென்னூர் பகுதியில் வீதி, வீதியாக உலா வந்த அம்மனுக்கு சுத்தபூஜை என்பதால், வீடுகள் தோறும், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, "குட்டிக்குடித்தல் வைபவம், நேற்று காலை புத்தூர் மந்தையில் நடந்தது. காளி ஓட்டமாக வந்த அம்மனின் முன்னிலையில், தாரை, தப்பட்டை, உடுக்கு அடித்து மருளாளிக்கு அருள் வர வைத்தனர்.
அரசு சார்பில் ஆடு: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலுக்கு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே, குட்டிக்குடித்தல் திருவிழாவுக்கு அரசு சார்பில் ஆடு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. தற்போது வரை இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் ஆடுகள் முதலில் பலியிடப்பட்டன. மருளாளி சிவக்குமார், அருள் வந்து, பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை குடித்தார். நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை, மருளாளி ஆவேசமாக குடிப்பது, காண்போரின் ரத்தத்தை உறைய வைத்தது. நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டதால், அப்பகுதி முழுவதும் ரத்த சகதியாக காட்சியளித்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மந்தையில் திரண்டதால், உறையூர், புத்தூர், தென்னூர் பகுதிகளில், ராட்டினம், சாலையோர கடைகள் என திருவிழா கோலம் பூண்டன. தொடர்ந்து, இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவமும், நாளை குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.