பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
சிவபெருமானுக்கு உரியதாக, மாசி மாதம் சதுர்த்தசியன்று கடைப்பிடிக்கப்படுவது தான் சிவராத்திரி. இது, பத்மராஜ ராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான ஆண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதால், சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் நாளும், மாதமும் நாடு முழுவதும் வேறுபடுகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும், சிவபெருமானின் அடிமுடி தேடிய நிகழ்ச்சியில் இருந்து தான், சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதேபோல, அமுதத்திற்காக பாற்கடலை கடைந்த போது வெளியான ஆலகால விஷத்தை சிவனார் உண்டது, பிரளய காலத்தில் உமையம்மை, சிவனாரை வழிபட்டது போன்ற கதைகளும் சிவராத்திரியுடன் இணைக்கப்பட்டு பேசப்படுகின்றன. சிவராத்திரி அன்று, உணவு உண்ணாமல், அன்று இரவு முழுவதும் விழித்திருந்து, இறைவனை வழிபட வேண்டும். அன்றைய இரவில், வில்வம், வெள்ளை அரளி, சிவப்பு அரளி, மல்லிகை, தும்பை, சம்பங்கி, நாகலிங்க பூ, ஊமத்தம் பூ ஆகியவற்றால், இறைவனை வழிபட்டால், அஸ்வமேத யாகம் செய்த பலன், கங்கையில் கோடி முறை நீராடிய பலன் கிடைக்கும் என, சிவபுராணம் கூறுகிறது.
ஆந்திரா, தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் சிவராத்திரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யோக மரபில், சிவபெருமான் தான் ஆதிகுருவாக குறிப்பிடப்படுகிறார். ஜோதிட ரீதியில் பார்த்தால், சிவராத்திரி அன்று இரவில் சஞ்சரிக்கும் கோள்களின் நிலை, மனித உடலுக்கும் மனதுக்கும் ஆன்மிக ரீதியில் மிகப் பெரிய ஆற்றலை அளிக்கும் விதத்தில் இருக்கும். அதனால் தான் அன்று இரவு, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்கள், தங்கள் கலை மூலம் இறைவனை வழிபடுகின்றனர். சிவம் என்றால் மங்கலம்; சங்கரன் என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவன். சிவராத்திரி அன்று இறைவனை வழிபட்டு நம் வாழ்வில் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு பெற முயல்வோம். (10ம் தேதி சிவராத்திரி)
-ஆர்.வைத்யநாதன்-