பதிவு செய்த நாள்
08
மார்
2013
12:03
ராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன். சத்ருக்னன், ஹனுமன், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர். இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்-தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஆனால் ராமாயணத்தில் ஊர்மிளை என்ற கதாபாத்திரம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். யார் இந்த ஊர்மிளை? அவள் என்ன சாதித்தாள்? அவளையும் மேலே குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரங்களோடு சேர்த்து நாம் ஏன் நினைவுகூர வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோமா? சீதையின் சகோதரிதான் ஊர்மிளை, லட்சுமணனின் மனைவி, சீதா கல்யாணம் நிகழ்த்தியபோது ஊர்மிளைக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. திருமணமான பிறகு ராமன் வனவாசம் செல்ல நேர்கிறது. ராமனுக்குத் துணையாக லட்சுமணனும் வனவாசம் சென்றுவிடுகிறான். அதற்குப்பின் ராமாயணக் கதை ராமன், லட்சுமணன், சீதை ஆகியோரைச் சுற்றியே செல்கிறது. அதனால் அயோத்தியில் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை.
ஆனால் ராமன் வனவாசம் செல்லுமுன் நிகழ்த்திய சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஊர்மிளை பற்றிய ஒரு முக்கியத் தகவல் தெரியவருகிறது. அதை விரிவாகப் பார்ப்போம். தனக்குப் பட்டாபிஷேகம் இல்லை; வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவானதும், தாய் கோசலையைச் சமாதானப்படுத்தி, அவள் ஆசி பெற்ற பின், சீதையிடம் அதுபற்றிச் சொல்லச் சென்றான் ராமன். சீதையோ தானும் காட்டுக்கு வருவதாகப் பிடிவாதம் செய்தாள், அதற்காக ராமனோடு வாதிட்டாள். ஸ்வாமி! தாங்கள் கானகம் செல்லும் செய்தி கேட்டு, தங்களை விட்டுப் பிரிய மனமில்லாத காரணத்தால், தங்கள் தாயும் தங்களுடன் கானகம் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால், கூட்டிச் செல்ல மாட்டீர்களா? என்று கேட்டாள். ஆம் சீதா அன்னை கவுசல்யாதேவியும் நீ கூறியபடியே என்னுடன் வருவதாகப் பிடிவாதம் பிடித்தார்கள். நான் அவர்களுக்கு ஸ்திரீ தர்மத்தை எடுத்துச் சொன்னேன். திருமணமான பெண் கணவனை விட்டுப் பிரியக்கூடாது. அதனால், என் தந்தை தசரதனுடன் அயோத்தியில்தான் தாங்கள் இருக்கவேண்டும் என்று விளக்கினேன். அவரும் அந்த நியாயத்ததை ஒப்புக்கொண்டார் என்றான் ராமன். நன்றாகச் சொன்னீர்கள் நியாயம்! நீங்கள் எடுத்துச்சொன்ன அந்த ஸ்திரீ தர்மம் எனக்கு மட்டும் பொருந்தாதா? என் பதிக்கு சேவை செய்ய நான் அவருடன் இருக்க வேண்டாமா? என்று வாதிட்டு ராமனை அவனது சொற்களாலேயே மடக்கி, அவனுடன் வனவாசம் செல்லும் அனுமதி பெற்றாள் சீதை.
லட்சுமணனுக்கு ராமனோடு தர்ம நியாய அடிப்படையில் வாதாடி, தானும் ராமனுடன் காட்டுக்கு வர அனுமதி பெற்று விடுகிறான். இந்நிலையில் சீதாதேவியும் ராமனுடன் கானகம் செல்ல முடிவெடுத்து விட்டாள் என்ற செய்தி கேட்டு, லட்சுமணனின் மனத்தில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. அதாவது, அண்ணனுக்கும் அண்ணிக்கும் சேவை செய்வதற்காகவே கானகம் செல்லும் தன்னோடு தன் மனைவி ஊர்மிளையும் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்பதே அவன் கவலை. இந்தக் கலக்கத்துடனேயே மனைவி ஊர்மிளையை அவளது அந்தப்புரத்தில் பார்க்கச் சென்ற லட்சுமணனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராமனின் வனவாசச் செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில், ஊர்மிளை மட்டும் சீவி முடித்து, சிங்காரம் செய்துகொண்டுல பொன்னாடைகளும் அணிகலன்களும் தரித்து மஞ்சத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்தாள். கோபத்தால் கண்கள் சிவந்த லட்சுமணன், இது என்ன கோலம் ஊர்மிளா? ஊரே அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உனக்கு ஏன் இந்த ஆடம்பரம்? என்று கேட்டான். அதற்கு அவள் நேரடியாக பதில் சொல்லாமல், ஸ்ரீராமன்தானே காட்டுக்குச் செல்ல வேண்டும்? உங்களை யாரும் போகச் சொல்லவில்லையே! நீங்கள் ஏன் மரவுரி தரித்து அலங்கோலமாக நிற்க வேண்டும்? என்று திருப்பிக் கேட்டாள். ஊர்மிளைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என ஒரு கணம் பதறினான் லட்சுமணன், சமாதானமாகப் பேசி, பல நியாயங்களை எடுத்துச் சொல்லி, அவள் செய்வது சரியல்ல என்று விளக்கினான். ஆனால் ஊர்மிளை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
நீங்கள் கோசல நாட்டின் இளைய ராஜகுமாரன், உங்கள் ராணியாக அரச போகங்களை அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தான் உங்களைத் திருமணம் செய்துகொண்டேன். அரச போகங்களைத் துறந்து செல்வது ஸ்ரீராமனின் விதி என்றால் அதில் நீங்கள் ஏன் பங்குகொள்ள வேண்டும்? நான் ஏன் என் சவுபாக்கியங்களை இழக்க வேண்டும்? என்று கேட்டாள். லட்சுமணனின் ரத்தம் கொதித்தது. தாடகையைவிடக் கொடிய அரக்கிபோல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் ஊர்மிளை. பெண் இனத்துக்கே அவளால் அவமானம் எனக் கருதினான். அவளை மனைவியாக அடைந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்து கொண்டான். அடிப் பாவி! நீ கைகேயியைவிடக் கொடியவளாக இருக்கிறாயே! அரசு போகத்திலும் ஆடம்பர வாழ்க்கையிலும் ஆசை கொண்டவள் நீ. பதிபக்தி இல்லாதவள். உன்னை மனைவி என்று சொல்வது கூடப் பாவம். இக்கணம் முதல் உன் சிந்தனையை என் மனத்திலிருந்து அகற்றிவிட்டேன். இனி நமக்குள் பந்தமில்லை, உறவில்லை. ஊர்மிளை என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை. இன்று முதல் நீ யாரோ, நான் யாரோ! என்று கோபத்தில் கொந்தளித்தவன் போய்வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல், போகிறேன் என்று கூறிப் புறப்பட்டான். தன் உணர்ச்சிகளை எல்லாம் கொன்றுவிட்டு, அவனுடன் உரையாடிய ஊர்மிளை, கணவன் லட்சுமணனின் தலை மறைந்ததும் விக்கி விக்கி அழுதாள். கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினாள்.
ராமனுக்கும் சீதைக்கும் 14 ஆண்டுகள் பணிவிடை செய்யப்போகும் லட்சுமணனுக்குத் தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள், காதல் நினைவுகள் ஏற்பட்டு, அதனால் அவர் செய்கின்ற பணிக்கு இடையூறு வராமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவள் இப்படியொரு நாடகமாடி, தன் மீது அவனுக்கு முழு வெறுப்பு ஏற்படும்படியாகச் செய்துகொண்டு, கணவன் ஏற்றுக்கொண்ட கடமை எனும் யாகத் தீயில் தன்னையே நெய்யாக்கி ஆஹூதி தந்தாள் ஊர்மிளை, 14 வருடங்கள் அன்ன ஆகாரமின்றி மிக எளிமையாக சனியாசியாக வாந்தாள். தான் செய்த இந்த தியாகத்தைப் பற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. லட்சுமணனுக்கும் ஊர்மிளை செய்த இந்தத் தியாகம் தெரிகிறது. வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டான். அப்போதும் லட்சுமணன் ஊர்மிளையை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்களுக்குள் உள்ள மனபேதத்தை ஊகித்தறிந்த சீதாதேவி, ஒருநாள் ஊர்மிளையை அழைத்துக் காரணம் கேட்டாள். அப்போதும் ஊர்மிளை சொல்ல மறுத்தாள். சீதா மிகவும் வற்புறுத்த தான் செய்த செயலையும் அதற்கான காரணத்தையும் விளக்கினாள் ஊர்மிளை சிதை பிரமித்து நின்றாள்.
ஊர்மிளா! ஆயிரம் சீதைகளுக்கு உனக்கு ஈடாக மாட்டார்கள். விரைவிலேயே நான் லட்சுமணனிடம் நடந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, உங்கள் இருவரின் பிரிவுத் துயரைத் துடைக்க வழி செய்கிறேன் என்றாள் சீதா. இதற்கான தருணத்தை சீதை எதிர்நோக்கியிருந்தாள். அப்போதுதான் ஸ்ரீராமன் கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு அழைத்துச் சென்று வால்மீகி ஆஸ்ரமத்தில் விட்டு வருமாறு லட்சுமணனுக்குக் கட்டளையிட்டான். இந்தத் தகவலை சீதைக்குத் தெரிவிக்காமல் மனசுக்குள் புழுங்கியபடி, கண்ணீரோடு லட்சுமணன் தேரைச் செலுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் அவனிடம் ஊர்மிளையின் தியாகத்தை எடுத்துக் கூறி அவளை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னாள் சீதை. ஒரு பக்கம் துயரமும், மறுபக்கம் ஊர்மிளை பற்றிப் பெருமிதம் கொண்ட லட்சுமணன், அண்ணி எனக்கொரு நல்ல செய்தியைச் சொன்னீர்கள். அதற்காக நன்றி! ஆனால் இந்தப் பாவி உங்களுக்கொரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். என் அண்ணனின் ஆணைப்படி, தங்களை இந்தக் கானகத்திலேயே விட்டுச் செல்ல வந்திருக்கிறேன். என்னை மன்னியுங்கள்! என்று கூறி கதறி அழுதான். அப்போது சீதை அதிர்ச்சியில் மனமுடைந்து சொன்னாள். லட்சுமணா! ஸ்ரீராமன் எது செய்தாலும் அதில் ஒரு தர்மம் இருக்கும்; ஒரு நியாயம் இருக்கும் அயோத்தியின் ஒரு பிரஜைக்கு நியாயம் வழங்க எனக்கு இந்த இரண்டாவது வனவாசம் தந்திருக்கிறார். பரவாயில்லை. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள். எக்காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் உன் மனைவி ஊர்மிளைக்கு இதுபோல் தண்டனை எதுவும் தந்துவிடாதே! தர்மம் அதை ஒருக்காலும் தாங்காது! பாவம் லட்சுமணன்! தாங்க முடியாத துயரத்துடன் அயோத்தி வந்தவன். நேராக ஊர்மிளையைச் சந்தித்து, அவள் தன் மனைவி என்றும் பாராமல் அவள் கால்களில் தடாலென விழுந்து, அவள் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான்.
ராமன் இருக்குமிடமே அயோத்தி என்ற கணவனின் திருவடிகளைப் பின்பற்றிக் கானகம் சென்று, பல துயரங்களை அனுபவித்து, பின்பு அக்னிப்பிரவேசம் செய்யவும் தயாரான சீதை தியாகியா? தாய் பெற்றுத் தந்த ராஜ்ஜியத்தைத் துச்சமாக மதித்து, தனயன் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து, அயோத்தியின் சேவகனாக 14 ஆண்டுகள் வாழ்ந்த பரதன் தியாகியா? அரச போகம் அனைத்தையும் துறந்து, அண்ணன் ராமனுக்குச் சேவை செய்ய 14 ஆண்டுகள் இமைக்காமல், கானகத்தில் தொண்டு செய்த லட்சுமணனின் தியாகியா? இவர்கள் அனைவரும் தியாகிகள் என்றால், கணவன் ஏற்றுக்கொண்ட தியாகப் பணி தடையின்றி நடக்க தன்னையே அவன் வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை உருவாக்கி, அந்தத் துயரத்தைத் தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டு, 14 ஆண்டுகள் ஊண் உறக்கமின்றி அரண்மனைக்குள்ளேயே அக்ஞாதவாசம் செய்து வாழ்ந்த ஊர்மிளையும் இவர்களுக்கு ஈடான தியாகிதான்.