சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நாளை துவங்கப் படுவதையொட்டி, மேடை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆடல் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜ பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான் நாட்டியாஞ்சலி. பரதம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா வகை நடனக் கலைஞர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சிதம்பரம் வந்து நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கின்றனர்.மகா சிவராத்திரி தினமான நாளை (10ம் தேதி) துவங்கும் விழா 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழா முன்னேற்பாடாக மேடைகள் அமைக்கும் பணிகள் நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடக்கிறது. விழாவில் பங்கேற்க நாட்டிய கலைஞர்கள் சிதம்பரம் வருவது ஒருபுறம் இருந்தாலும் கண்டு ரசிக்க வெளிநாட்டினர் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சிதம்பரம் நகரம் களைகட்ட துவங்கியுள்ளது.