பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
அலகாபாத்:மூன்று மாதங்கள் விமரிசையாக நடைபெற்ற, மகா கும்பமேளா புனித நீராடல் நிகழ்ச்சி, சிவராத்திரி நாளான நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, இறைவனை வழிபட்டனர்.உத்தர பிரதேசத்தின் அலகாபாத் நகரில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், திரிவேணி சங்கமத்தில், மகா கும்பமேளா, புனித நீராடல் நிகழ்ச்சி துவங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், நீராடலுடன் கூடிய இறைவழிபாட்டு நிகழ்ச்சி, மகர சங்கராந்தி நாளான, ஜனவரி, 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 55 நாட்கள் நடைபெற்ற இவ்விழா, நேற்று, சிவராத்திரி நாளுடன் நிறைவடைந்தது. நேற்றும், பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். கும்பமேளா நடைபெற்ற, மூன்று மாதங்களில், சில கோடி பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் நீராடினர். பிப்ரவரி, 10ம் தேதி நடைபெற்ற மவுனி அமாவாசை நாளில் மட்டும், மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடினர்.நாடு முழுவதும் உள்ள மடங்களின் தலைவர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், பக்தர்கள், வி.வி.ஐ.பி.,கள் என, கோடிக்கணக்கானோர், இங்கு புனித நீராடினர். இதற்காக, உத்தர பிரதேச மாநில அரசு, விமரிசையான ஏற்பாடுகளை செய்திருந்தது.நெரிசல், தீவிபத்து போன்ற பல காரணங்களால் உயிர் பலி ஏற்பட்டது. அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட, திடீர் நெரிசலில் சிக்கி, 38 பேர் இறந்தனர். இதன் மூலம், மகா கும்பமேளாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 45 ஆக உயர்ந்தது.நாடு முழுவதும் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில் இருந்து பிரமுகர்கள், கும்பமேளாவில் பங்கேற்றனர்.நேற்றைய இறுதி நாளில், ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சால், தன் குடும்பத்தினருடன், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.