பதிவு செய்த நாள்
09
மார்
2013
01:03
சிவகாசியில் சிவன் கோயிலுக்குள் அடுத்தடுத்து வந்த சில இளைஞர்கள், இடுப்பில் துண்டு கட்டி சுவாமியை தரிசிக்க, எல்லோரது பார்வையிலிருந்தும் வித்தியாசமாக தென்பட்டனர். சன்னதி முன் பல்லக்கை தூக்கி வைத்தல், பிரகாரத்தில் சிவப்பு கம்பளம் விரிப்பது என பணி முடித்து, பஞ்ச வாத்தியங்களான மந்தம், பாணி, தாளம், வெண்சங்கு, வாங்கா வுடன் இளைஞர்கள் தயாராகினர். இரவு 8.45க்கு பூஜை தட்டுடன் பூஜாரி கருவறைக்குள் சென்று சுவாமியை பள்ளியறைக்கு அழைத்து செல்ல ஆயத்தமானார். மறுகணம் பஞ்ச வாத்தியங்களில் தாள நயத்துடன் இசை கருவிகளை இயக்கி, பக்திபரவசத்திற்கு மாற்றினர் அந்த இளைஞர்கள். பூஜையை அடுத்து உற்சவர் பல்லக்கிற்கு வந்தார். பல்லக்குபின் பக்தர்கள் வெண்சாமரம் வீசி, பக்திபாடல்பாடி பின்தொடர்ந்தனர். பல்லக்கு ஒவ்வொரு இடத்திற்கு வந்த போதும் அதற்கு ஏற்ப இசைத்து பக்தர்களை பரவசத்திற்கு உள்ளாக்கினர். சுவாமி, அம்பாள் சன்னதியில் பள்ளியறை பூஜைகள் நடந்தேறியது.
நாகரீக உலகில் இளைஞர்கள் தடம்மாறி செல்லும் சூழலில் பொறுப்புடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் இந்த இளைஞர்கள் மனம்திறக்கிறார்கள்...பிரபலமான சிவாலயங்களில் ஆகம விதிப்படி திருப்பள்ளி எழுச்சி, பள்ளியறை பூஜைகள் நடைபெறுவது போல் சிவகாசி சிவன் கோயிலில் நடத்த விரும்பினோம். சிவகாசி சிவனடியார் அறநெறி கழகம் முயற்சியில் 2 மாதம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று கருவிகளை இயக்க ஏழுபேர் முறையான பயிற்சி பெற்றோம்.தினமும் கோயில் நடை திறப்பிற்கு அதிகாலையில் தயாராகி காலை 6 மணிக்கு, பள்ளி எழுச்சிக்கு இசைப்போம். திருமுறை பாராயணம் படித்து அவரவர் பணிக்கு செல்வோம். பின் இரவு பள்ளியறை பூஜையில் இசைப்போம். ஒரு ஆண்டாக இறைப்பணி செய்கிறோம். இப் பணியில் மாணவர்கள், இளைஞர் என பலரும் சங்கமித்ததால் 30 பேர் உள்ளோம். ஆட்டோ டிரைவர், லோடு மேன், ஆசிரியர், வியாபாரி, மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளோம். என்ன வேலை இருந்தாலும் குறித்த நேரத்தில் குறைந்தது 10 பேராவது கோயிலில் ஆஜராவோம். இப்படியே போனால் சாமியாராகிவிடுவோம் என ஆரம்பத்தில் பெற்றோர் அஞ்சினர். எங்களின் ஒழுக்கம், பக்தியை கண்டு இப்போது மதிக்கின்றனர். நாங்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதால், எந்த தவறும் செய்வதில்லை. இசைக்கு எல்லோரையும் ஈர்க்கும் சக்தி உண்டு என்பதை நன்கு உணர்ந்தோம். இப்போது பள்ளி எழுச்சி, பள்ளியறை பூஜைக்கு ஏராளமான சிவனடியார்கள் வருகின்றனர். இதனால் ஆன்மிகம் தழைக்கும், ஒற்றுமை வளரும், ஊரில் தொழில் வளம் பெருகும் என்றனர் நம்பிக்கையாக! ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியோ என கோரசாக பாடல் பாடி விடைபெற்றனர். சிவனடியார்களோடு பேச, 84899 60049
- சிவரவி