பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா (பிரம்மோற்சவம்), வரும் 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், வரும் 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா துவக்கமாக, 16ம் தேதி இரவு, வெள்ளி பெருச்சாளி வாகனத்தில், விநாயகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் மறுநாள் காலை 5:30 மணியிலிருந்து 7:00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். அன்று காலை பவழக்கால் சப்பரம், இரவு சுவாமி சிம்மன வாகனத்திலும், அம்பிகை கிளி வாகனத்திலும், நான்கு ராஜ வீதிகளை வலம் வருவர். இரண்டாம் நாள் உற்சவமான, 18ம் தேதி காலை, சூரியப்பிரபை, இரவு, சுவாமி சந்திரப்பிரபை வாகனத்திலும், அம்பிகை அன்ன வாகனத்திலும், வீதியுலா வருவர். மூன்றாம் நாள் திருவிழா அன்று காலை, பூத வாகன உற்சவம் நடைபெறும்.
இரவு சுவாமி, அம்பிகை, சண்டேசுவரர், ஆகியோர் பழவக்கால் சப்பரங்களிலும், விநாயகர் வெள்ளி பெருச்சாளி வாகனத்திலும், சுப்ரமணியர் தங்க மயில் வாகனத்திலும், சின்னகாஞ்சிபுரம் சென்று வருவர். நான்காம் திருவிழா அன்று காலை, நாக வாகனம், இரவு வெள்ளி ரிஷப வாகனம் உற்சவம் நடைபெறும். ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலை, வெள்ளி அதிகார நந்தி சேவை, இரவு ஸ்ரீகைலாசபீட ராவண வாகன உற்சவம் நடைபெறும். மறுநாள் 22ம் தேதி காலை, 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன், கண்ணாடி விமானத்தில் எழுந்தருவர், இரவு பிரபல உற்சவமான வெள்ளித் தேர் உற்சவம், வாண வேடிக்கை நடைபெறும்.
ரதோற்சவம் ஏழாம் நாள் காலை, ரதோற்சவம் நடைபெறும். புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரில் சுவாமி எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வருவார். இரவு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். எட்டாம் நாள் திருவிழா அன்று காலை, ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரதக்காட்சி, மாலை 5:00 மணிக்குபிட்சாடனர் தரிசனம், இரவு மின் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில், சுவாமி வீதியுலா நடைபெறும். ஸ்தல மகிமை காட்சி ஒன்பதாம் நாள் காலை ஆள்மேல் பல்லக்கு, இரவு கோயில் ஸ்தல மகிமையை விளக்கும் வகையில், வெள்ளி மாவடி சேவை உற்சவம் நடைபெறும். பத்தாம் நாள் காலை, சபாநாதர் தரிசனம், ஏலவார் குழலியம்மை ஒக்கப்பிறந்தான் குளத்திற்கு எழுந்தருளி மண்டகப்படி கண்டருளல், இரவு, பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் நடைபெறும். மறுநாள் காலை 5:00 மணிக்கு, சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வருவார். பதினோராம் திருவிழாவான 27ம் தேதி பகல் 12:00 மணிக்கு, கந்தப்பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம் உற்சவம், 28ம் தேதி காலை புருஷாமிருக வாகனம், இரவு பஞ்ச மூர்த்திகள், தங்கம், வெள்ளி, ரிஷப வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி, 29ம் தேதி காலை சந்திரசேகர் வெள்ளி ரிஷபத்தில் எழுந்தருளி, சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு, யானை வாகனம் உற்சவம் மற்றும் கொடி இறக்கம் நடைபெறும்.
விடையாற்றி விழா நிறைவாக, 30ம் தேதி காலை, உற்சவ சாந்தி சிறப்பு, 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம், மாலை 6:00 மணிக்கு, பொன் விமானத்தில் திருமுறை உற்சவம் நடைபெறும். அடுத்த மாதம் 13ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம் நிறைவாக, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறும். விழாவையொட்டி, தினமும், மாலை, கோயில் வளாகத்தில் உள்ள, அண்ணா கலையரங்கில் சைவ சமய சொற்பொழிவுகள், தேவார பாராயணம், நாதஸ்வர கச்சேரி, வேத பாராயணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.