காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2013 10:03
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், மாசி மகா சிவராத்திரி விழாவில் ,நேற்று பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றில் அமைந்துள்ளது. மூலஸ்தானம் என்னும் குச்சுவீட்டின் கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இரவு, பகலாக அணையா நெய்விளக்கு எரிகிறது. பல்வேறு சிறப்புக்களை கொண்ட இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கானக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சிரமம் இன்றி அம்மன் தரிசனம்: கடந்த காலங்களில் கோயிலின் நுழைவு பகுதியில் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும். தற்போது பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி.,தரிசனம், என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. கோயில் நுழைவுப்பகுதியில் பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், எவ்வித சிரமமும் இல்லாமல் பக்தர்கள் கோயில் நுழைவுப் பகுதியில் வந்ததும் நேராக அம்மனை தரிசனம் செய்யலாம். எவ்வளவு பக்தர்கள் கூட்டம் வந்தாலும் விரைவாக அம்மன் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு பள்ளம் ஏற்படுத்தியுள்ளனர். உடை மாற்றுவதற்கு தற்காலிக செட் அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன்: நேற்று காலையில் இருந்து பிள்ளையார் கோயில் எதிரில் உள்ள மஞ்சளாற்றங்கரையில் இருந்து, பக்தர்கள் அக்னி சட்டியில் தீ மூட்டி அங்கிருந்து எடுத்து அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து செலுத்தினர்.