பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அங்காளம்மன், பூங்காவனத்து அம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், தாம்சன் பேட்டை பூங்காவனத்து அம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 6 மணிக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலகுகள் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்திக்கொண்டு ஆட்டோ, டிராக்டர், கார் போன்ற வாகனங்களை இழுத்து சென்றனர். மதியம், 2 மணிக்கு எருதுகள் பூட்டிய அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன், பூங்காவனத்து அம்மன் மயான புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற அம்மனுக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி சென்று அம்மனுக்கு பூஜை செய்த காட்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடந்த மயான கொள்ளை விழாவில், பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், பெங்களூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் அன்னதானம் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில்களில்யான கொள்ளை திருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை முகவெட்டு நிகழ்ச்சியும், 10 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் மயான புறப்பாடும் நடந்தது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் வரை மயானத்தில் மயான கொள்ளை விழா நடந்தது.
மாலை 3 மணிக்கு மயானத்திலிருந்து அம்மன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஸ்வாமி திருக்கல்யாணம் வைபவமும், நேற்று அதிகாலை முகவெட்டுதலும், மதியம், 12 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் மயான புறப்பாடும் நடந்தது. அம்மன் தேர் முன்பு பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், ஆகாய காவடியில் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* பென்னாகரம் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு அலகு குத்திக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.