பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
மோகனூர்: மகா சிவராத்தியை முன்னிட்டு, மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில், 54 சிவலிங்கம் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.மோகனூர் அடுத்த மணப்பள்ளியில், பிரசித்தி பெற்ற பீமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்குபுறமும் மணலால் சூழப்பட்டதால், மணப்பள்ளி என்ற பெயர் பெற்ற கிராமத்தில், காவிரிக்கரையில், இக்கோவில் அமைந்துள்ளது.சுற்றுச்சுவரில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம், இக்கோவில், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், 14ம் நூற்றாண்டில், கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.வனப்பகுதியில் தவம் செய்த பீமன், காவிரி மணலை கையில் பிடித்து லிங்கம் உருவாக்கி வழிபட்டார் என்றும், பீமன் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால், "பீமேஸ்வரர் என்ற பெயர் விளங்கியதாகவும், கல்வெட்டுகள் கூறுகின்றன.இக்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6.15 மணிக்கு, விநாயகர் பூஜையுடம் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, 1,008 சகஸரநாமம், 54 சிவலிங்கம் வைத்து, 54 பெண்கள் பூஜை செய்து, தேங்காய் பழம் உடைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.அதை தொடர்ந்து, இரவு, 8 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.