சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தன் தலையில் தேங்காய் உடைத்து குலதெய்வத்தின் நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவு செய்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ளது அம்மாபாளையம். இங்குள்ள மஹாலட்சுமி மற்றும் பொம்மன், பொம்மி கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள குரும்பகவுண்டர் என்ற சமூகத்தின் குல தெய்வமாக விளங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவாரத்திரி இரவு இக்கோவிலில் குரும்பகவுண்டர் சமூதாயத்தை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, குடும்ப தலைவர் தன் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்தி கடனை நிறைவேற்றுவது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் இரவு இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள குரும்பகவுண்டர் சமூதாயத்தை சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்தனர்.பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.பின், ஸ்வாமியின் நகை மற்றும் வெள்ளி காப்புகளை பெரிய மூங்கில் தட்டில் வைத்து வணங்கி, எடுத்து சென்று ஸ்வாமி சிலைகளுக்கு அணிவித்தனர். அப்போது குடும்ப தலைவர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்கள் குலதெய்வங்களுக்கு நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். இந்த வினோதமான நேர்த்தி கடனை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.