பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
சேலம்: சேலத்தில், முதல் முறையாக, தேர்வீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோயிலில், அபிஷேக பால், சாக்கடையில் கலப்பதை தவிர்க்க, உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 30 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. மாரியம்மன், காளியம்மன் கோயில்கள், பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களின் குல தெய்வ வழிபாட்டு தலங்கள் என்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளது. சேலம் மாநகர பகுதியில் மட்டும், 500 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. பெரும்பாலான கோயில்களில், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக, அதிகாலை நேரங்களில், பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால், விசேஷ பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
கோயில், அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும், பொருட்கள், அருகில் உள்ள சாக்கடை கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில், ஏற்கனவே, சாக்கடை கால்வாய்களில், ஹோட்டல் கடைகாரர்கள், மார்க்கெட் வியாபாரிகள், திருமண மண்டபம் நடத்தி வருபவர், கறிக்கடைகாரர் ஆகியோரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அவை வெளியேற முடியாத அவல நிலை நிலவி வருகிறது. கோயில் அபிஷேபொருட்கள் குறிப்பாக, பால், சாக்கடை நீரில் கலப்பதால், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு, சாக்கடையில் கொசு புழு உற்பத்திக்கு வழி வகிக்கிறது. சேலம் தேர்வீதியில், அமைந்துள்ள ராஜகணபதி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும், ஆயிரக்கணக்கான லிட்டர் பால், ராஜகணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. கோயிலில் இருந்து வெளியேறும் அபிஷேக கழிவுகள், சாக்கடையில் கலந்து, கடுமையான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. சேலம் மாநகராட்சி, அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்களிடம், சாக்கடையில், அபிஷேக பொருள் கொட்டப்படுவதை தவிர்க்க, உறிஞ்சி குழி வசதியை ஏற்படுத்த அறிவுரை வழங்கினர்.
ராஜகணபதி கோயில் அர்ச்சகர்கள் சார்பில், தற்போது, 40 ஆயிரம் ரூபாய் செலவில், 10 அடிக்கு மேல் குழியை தோண்டி, செங்கல், மணல், ஜல்லி மற்றும் கூலாங்கற்களை கொண்டு, உறிஞ்சி குழி அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. கோயிலில், அர்ச்சனை கழிவு, சாக்கடை கலக்காமல், நேரடியாக, உறிஞ்சி குழி மூலம், வடிகட்டிய நிலையில், பூமிக்கு அடியில் சென்று விடும். இதனால், நிலத்தடி நீர் மாசுபடுதல் உள்ளிட்ட பாதிப்பு எதுவும் ஏற்படாது.
கோயிலில், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள், புழுக்களும், கொசுக்களும் நிறைந்த சாக்கடையில் கலந்து வருவதால், பெரும்பாலான பக்தர்கள், மனம் வருந்தி சென்றனர். தற்போது, மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனை ஏற்று, கோயில் நிர்வாகம் இதைப்போன்ற நடவடிக்கையில் இறங்கியிருப்பது, பக்தர்கள் மத்தியிலும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில், ராஜகணபதி கோயிலில், முதல் முறையாக, உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளதை போல, பிரசித்தி பெற்ற பிற கோயில்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றிலும், இதை போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சாக்கடை கழிவுகளால், ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க முடியும்.