பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
கும்பகோணம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் இரவிலிருந்து, விடியும் வரை, சிவராத்திரி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி, அம்பாள், நடராஜரை வழிபட்டனர். ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்சத்தில், சதுர்த்தி திதியன்று வருவது மஹா சிவராத்திரியாகும். சிவபெருமானை விட்டு பிரியாத அனைத்து உயிர்களும் உய்வுற, நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே, மஹாசிவராத்திரி எனப்படுகிறது. இந்நாளில் வழிபடும் அனைவருக்கும் சகல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் மஹா சிவராத்தியன்று, இரவு முழுவதும், நான்கு காலங்களில் சிவன் கோயில்களில் வழிபட்டு, பேறு பெற்றான் என்பது ஐதீகம். அதன்படி மஹா சிவராத்திரி அன்று குடந்தை கீழ்கோட்டம் எனும், கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில், முதல் காலத்திலும், திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும், திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும், நாகை காரோணத்தில், நான்காவது காலத்திலும் ஈசனை வழிபட்டு, தன் சாபம் நீங்கப்பெற்று, பழைய வலிமை கிடைக்கும் என, சிவபெருமான் அருளியபடி, ஆதிசேஷன் தமது தேவிகளுடன், மஹாசிவராத்திரியன்று, நான்கு காலங்களும் பூஜை செய்து, பழைய பொலிவு பெற்றார்.
ஆதிசேஷன் வழிபட்ட முதல் காலம் என்ற சிறப்பு பெற்ற கீழ்கோட்டமான, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி முதல்காலமான நேற்று முன்தினம் மாலை, 6 மணி முதல், இரவு, பத்து மணி வரை, சிவபெருமானை பக்தர்கள் வழிபட்டனர். சிவன்ராத்திரியை முன்னிட்டு, நாகேஸ்வர ஸ்வாமிக்கு இரவு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை ஆகியவை நடந்தது. இதேபோல் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில், வியாழ சோமேஸ்வரன், அபிமுகேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், கௌதமேஸ்வரர், மேலக்காவேரி கைலாசநாதர், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர், இன்னம்பூர் எழுத்தறிவித்தநாதர் ஆகிய கோயில்களில், நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு, ஸ்வாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.