Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-3 திருப்புகழ் பகுதி-5 திருப்புகழ் பகுதி-5
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-4
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
03:03

177. மந்தரம தெனவேசி றந்த
கும்பமுலை தனிலேபு னைந்த
மஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசி
மன்றுகமழ் தெருவீதி வந்து
நின்றவரை விழியால்வ ளைந்து
வந்தவரை யருகேய ணைந்து  தொழில்கூறி

எந்தளவு மினதாக நம்பு
தந்துபொருள் தனையேபி டுங்கி
யின்பமருள் விலைமாதர் தங்கள்  மனைதேடி
எஞ்சிமன முழலாம லுன்தன்
அன்புடைமை மிகவேவ ழங்கி
என்றனையு மினிதாள இன்று  வரவேணும்

விந்தையெனு முமைமாது தந்த
கந்தகுரு பரதேவ வங்க
மென்றவரை தனில்மேவு மெந்தை  புதல்வோனே
மிஞ்சுமழ கினிலேசி றந்த
மங்கைகுற மடமாது கொங்கை
மென்கிரியி லிதமாய ணைந்த  முருகோனே

சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து
வந்தனைசெய் சரணார விந்த
செந்தமிழி லுனையேவ ணங்கு  குருநாதர்
தென்றல்வரை முனிநாத ரன்று
கும்பிடந லருளேபொ ழிந்த
தென்பழநி மலைமேலு கந்த  பெருமாளே.

178. மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக  மதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி  வலையாலே

நிலவெறி  யங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு  மொயிலாலே
நிதமிய லுந்தர்க் குணத்தி லேபர
வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு  மதிகேடாய்

அலையநி னைந்துற் பனத்தி லேயநு
தினமிகு மென்சொப் பனத்தி லேவர
அறிவும ழிந்தற் பனத்தி லேநித  முலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்க ணாடியு
மலர்க்கொடு நின்பொற் பதத்தை யேதொழ  அருள்தாராய்

பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப  மாலையு  மணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
பழிநியி லன்புற் றிருக்கும் வானவர்  பெருமாளே.

179. மனக்கவலை யேதுமின்றி உனக்கடிமையேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள்  தவறாதே
வகைப்படிமனோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள்  பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நினைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள்  முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க  முறையாலே

மனத்தில்வரு வோனே என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த  முனிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயிரங்கி
மருட்டிவரு சூரை வென்ற  முனைவேலா

தினைப்புன முனேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த  பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநிறைந்த
திருப்பழநி வாழ வந்த  பெருமாளே.

180. முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார  மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல்  தலைகீழ்வீழ்ந்

தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி  மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான  மருளாயோ

மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை  விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர  முருகோனே

பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடும்  இளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு  பெருமாளே.

181. முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி  னிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி  வருமாதர்

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி  விடுமாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ் வுனது பதத்தை  யருள்வாயே

சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த  தகவோடே
தழையு மரமு நிலத்தில் கடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன்  மருகோனே

அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து  வருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து  பெருமாளே.

182. முருகுசெறி குலழவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ  அநுராகம்
முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு  துளிவீச

அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள்  குழையேற
அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை  மறவேனே

நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறென முறியவிடும்  வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக  டுறைவோனே

வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி  மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு  பெருமாளே.

183. மூலங்கிள ரோகுரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய  முதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள  விடவோடிப்

பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுடு ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ  மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும்  அருள்வாயே

சூலங்கலை மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு  முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக  மயில்வீரா

காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட  மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய  பெருமாளே.

184. வசனமிக வேற்றி  மறவாதே
மனது துய ராற்றி  லுழலாதே
இசைபயில்ச டாக்ஷ  ரமதாலே
இகபரசௌ பாக்ய  மருள்வாயே
பசுபதிசி வாக்ய  முணர்வோனே
பழநிமலை வீற்ற  ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி  மிகவாழ
அமரர்சிறை மீட்ட  பெருமாளே.

185. வரதா மணிநீ  யெனவோரில்
வருகா தெதுதா  னதில்வாரா
திரதா திகளால்  நவலோக
மிடவே கரியா  மிதிலேலு
சரதா மறையோ  தயன்மாலும்
சகலா கமநூ  லறியாத
பரதே வதையாள்  தருசேயே
பழனா புரிவாழ்  பெருமாளே.

186. வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள்  குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள்  வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென  இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி  னருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட  வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு  மயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய  முருகோனே
வேடிங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய  பெருமாளே.

187. விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல ணிந்தநு ராகமு மேசொலி
விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி  யழகாக
விரிகு ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமறி
விரக மொங்கிய மாமுலை யாலெதி  ரமர்நாடி

இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர் வீதியி லேவர
எவர்க ளுஞ்சித் மால்கொளு மாதர்கண்  வலையாலே
எனது சிந்தையும் வாடிவி டாவகை
அருள்பு  ரிந்தழ காகிய தாமரை
இருப தங்களி னாலெனை யாள்வது  மொருநாளே

மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
வடிவு தங்கிய வேலினை யேவிய  அதிதீரா
மதுர இன்சொலி மாதுகை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி
மவுன சுந்தரி காரணி யோகினி  சிறுவோனே

பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
பவனி வந்தக்ரு பாகர சேவக  விறல்வீரா
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநி யங்கிரி மீதினில் மேவிய  பெருமாளே.

188. கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச்  சிரமான
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படவிடை யண்பைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக்  கொடிபோலச்

சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிககள் களபங்கச்  சுடைமாதர்
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவடட்டி யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழியின்பைத்  தவிர்வேனோ

பறித்த விழிதலை மழுவுலை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக்  குருநாதா
பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட்  கதிர்வேலா

தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற்  றிருபாதா
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப்  பெருமாளே.

189. குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயில்மயிர் குருதியொ டிவைபல  கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமைய
ரிடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலா நெறியிலர் மிருகணை  விறலான

சரம்ப ருறவனை நரகனை துரகனை
யிரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு  மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினி
லழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு  மறவேனே

இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழில்
உறைந்த குயிலளி யொலிபர விடமயில்
இசைந்து நடமிடு மிணையிலி புலிநகர்  வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த வசுரரொ டிபபரி யமபுரம்  விடும்வேளே

சிரம்பொ னயனொடு முனிவர்க ளமரர்க
ளரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர்  குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங் கொடணைகுக சிவமலை மருவிய  பெருமாளே.

190. களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள்  குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
கடியிருளு டுக்கு லங்க  ளெனவீழ

முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று  விலைகூறி
முதலுளது கைப்பு குந்து  அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி  மெலிவேனோ

இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த  குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க  னருள்வோனே

குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த  குகவேலா
குடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்த
குறவர்மக ளைப்பு ணர்ந்த  பெருமாளே.

191. குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தத் தங்குந் தண்செங் 
கமலமு மெனவொளிர் தருமுக வனிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர்  விரகாலும்

கும்பம் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றன் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர்  மயலாலும்

என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிகு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன  மருள்வாயே

எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுங் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில்  மருகோனே

ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை  யடுவோனே

உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுனி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை  புயவீரா

அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு  திறலேனே

அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயனிறை வளமுறு சிவகிரி மருவிய  பெருமாளே.

192. கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய  விலைமாதர்
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருணைப் படியெனை யாளவு மேயருள்  தரவேணும்

இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய  வடிவோனே
இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர  முதல்வோனே

நிலவைச் சடைமிடை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய  சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு  முரியோனே

பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய  வகையாலே
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர்  பெருமாளே.

193. புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்  சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத்  தனிமூவ

ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக்  குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள்   கிரியாவும்

பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத்  தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்  குமரேசா

படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற்  பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப்   பெருமாளே.

194. ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு  மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை  குழலாலே
யாலே மணமலி  குழலாலே

சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை  யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள்  புரிவாயே

போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற  மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு  திறலோனே

வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய  குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர்  பெருமாளே.

195. கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள  முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள்  கரமீதே

காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு  மடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது  மறவேனே

ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர  முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர  புரிவேலா

மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக  மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர்  பெருமாளே.

196. சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப  தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து  நிலைகாணா

ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று  மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு  புரிவாயே

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை  யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற  நெடியோனாம்

வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து  பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்க ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர்  பெருமாளே.

197. சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி  பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி  எவரோடுங்

கூறுமொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு  னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள்  புரிவாயே

மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி  புனைவோனே
மாக முகடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடடைய  முருகோனே

வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை  யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள்  பெருமாளே.

198. தோகைமயி லேகமல மானேயு பசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லிலாவி நோதமுழு  துணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி
சோர்வதிலை யாண்டிமை யாவேனு மாணைமிக  மயலானேன்

ஆகமுற வேநகம தாலேமி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி  யுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள்  தருவாயே

மாகமுக டோடகில் பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது  கடைநாளில்
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய் னாரினிய  மருகோனே

மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரிசேவகன  துளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர்  பெருமாளே.

199. பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக  அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதனைவுத் துங்க மானத  எனவோதிச்

சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தி யாரரு  குறலாமோ

ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுய  அருள்மாயன்
ஆதி நாரணனற் சங்க பாணிய 
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான நான்முகனற் றந்தை சீதரன்  மருகோனே

வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன  முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர்  பெருமாளே.

நான்காவது படைவீடு - சுவாமிமலை (திருவேரகம்)

200. அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென்  றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
றிவாகியுள மால்கொண்  டதனாலே

சிவாயமெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென்  றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதம்  தருவாயே

உவாவின யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறும்  கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங்  கையிலோனே

துவாதச புயாசல ஷடாநந வராசிவ
சுதூஎயினர் மானன்  புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு 
சுவாமிமலை வாழும்  பெருமாளே.

201. ஆனனமு கந்து தோளொடு
தோளிணைக லந்து பாலன
ஆரமுது கண்டு தேனென  இதமூறல்
ஆதரவி னுண்டு வேல்விழி
பூசலிட நன்று காணென
ஆனையுர மெங்கு மோதிட  அபிராம

மானனைய மங்கை மார்மடு
நாபியில்வி ழுந்து கீடமில்
மாயுமனு வின்ப வாசைய  தறவேயுள்
வாரிஜப தங்கள் நாயடி
யேன்முடிபு னைந்து போதக
வாசகம்வ ழங்கி யாள்வது  மொருநாளே

ஈனவதி பஞ்ச பாதக
தானவர்ப்ர சண்ட சேனைக
ளீடழிய வென்று வானவர்  குலசேனை
ஏவல்கொளு மிந்த்ர லோகவ
சீகரவ லங்க்ரு தாகர
ராசதம றிந்த கோமள  வடிவோனே

சோனைசொரி குன்ற வேடுவர்
பேதைபயில் கின்ற ஆறிரு
தோளுடைய கந்த னேவய  லியில்வாழ்வே
சூளிகையு யர்ந்த கோபுர
மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்று லாவிய  பெருமாளே.

202. ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையைய  டைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி
யாதீத மகளமெப் போது முதயம  நந்தமோகம்

வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலம  சங்கøயால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிருபமு
மாறாத சுகவெளத் தாணு வுடனினி  தென்றுசேர்வேன்

நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி  லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரக  டம்பவேலா

கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
மானோடு மகிழ்கருத் தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடை  நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை  தம்பிரானே.

203. எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில் மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் கருதியின் முறையாடே;

சந்தித் தரஹர சிவசிவ சரணெண
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற
சந்தச் சபைதனில் எனதுள முருகவும் வருவாயே.

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
தூங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா;

கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
எந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையருள் இளையோனே;
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே.

204. ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ்  சனையாலே
ஒளிபெறவே யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் திடுவேனைக்

கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
கருவினையொ டருமலமு நீறு கண்டுதண்  டருமாமென்
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந்  தெனையாள்வாய்

திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
திகழருண கிரிசொருப னாதி யந்தமங்  கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும்  புதல்வோனே

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களும்
குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந்  திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம்  பெருமாளே.

205. கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித்  தனலூதிக்
கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச்  செயல்மாளக்

குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற்  குருநாதா
குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற்  றுணர்வேனோ

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
புயலுடன டங்க வேபிழைத்
திமையவர்கள் தங்க ளூர்புகச்  சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள நந்த சூடிகைத்  திருமாலும்

பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப்  பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப்   பெருமாளே.

206. காமியத் தழுந்தி  யிளையாதே
காலர்கைப் படிந்து  மடியாதே
ஓமெழுத்தி லன்பு  மிகவூறி
ஓவியத்தி லந்த  மருள்வாயே
தூமமெய்க் கணிந்த  சுகலீலா
சூரனைக் கடிந்த  கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த  மயில்வீரா
ஏரகத் தமர்ந்த  பெருமாளே.

207. சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க  அறியாத
சடகசட மூடி மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க   முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற  குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப  மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க  பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த  வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த  மயில்வீரா
அதிசமய நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின்  முருகோனே.

208. சுத்தியந ரப்புடடென லுப்புறுத சைக்குடலொ
டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர்  சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக  வங்கமூடே

எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில்  பஞ்சபூதம்
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
யெத்தனைக வட்டையுந டக்கையு யிர்க்குழுமல்
எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில்  மங்குவேனோ

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள  மண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமெ பக்குவிட  வென்றவேலா

சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநடனங்  கொள்வோளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ்  தம்பிரானே.

209. சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
மாதரைவ சம்ப டைத்த  வசமாகிச்
சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
காலமுமு டன்கி டக்கு  மவர்போலே

காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
நாளுமிக நின்ற லைத்த  விதமாய
காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி
லேயடிமை யுங்க லக்க  முறலாமோ

ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
பூகமரு தந்த ழைத்த  கரவீரம்
யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
ஏரகம மர்ந்த பச்சை  மயில்வீரா

சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
பாணியர்தொ ழுந்தி ருக்கை  வடிவேலா
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த
சூரனுட லுந்து ணித்த  பெருமாளே.

210. தருவரிக ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட  முதலான
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல்  வகைபாடி

மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க  ளிடமாக
வருமதுவொபோதுமென்றுவொருபணமு தாசினஞ் சொல்
மடையரிட மேந டந்து  மனம்வேறாய்

உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து  விடவேநல்
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு  தருவாயே

குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளின வாளை கண்டு  பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்த வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த  பெருமாளே.

211. தெருவினில் நடவா மடவார் 
திரண்டொ றுக்கும்  வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும்  மதியாலே

பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங்  கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தம்  விடலாமோ

ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும்  வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும்  முருகோனே

அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும்  புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும்  பெருமாளே.

212. நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து  தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி  மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து  சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று  பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின் ற  குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கிரங்கு  மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த  பெருமாளே

213. நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
நிறைகுழல் மீத ணிந்து  குழைதாவும்
நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
நினைவற வேமொ ழிந்து  மதனூலின்

கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
கனியித ழேய ருந்தி  யநுராகக்
கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
கபடனை யாள வுன்ற  னருள்கூராய்

உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
முயர்கயி லாய முப்பொன்  வரைதானும்
உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
உமையரு ளால்வ ளர்ந்த  குமரேசா

குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
குமரக டோர வெங்கண்  மயில்வாழ்வே
கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
குருமலை மீத மர்ந்த  பெருமாளே.

214. நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று  வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த  நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு  னருள்கூர
நீடார்ச டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ  லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த  குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரர்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி  மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின்  முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற  பெருமானே.

215. நிறைமதி முகமெனு  மொளியாலே
நெறிவிழி கணையெனு  நிகராலே
உறவுகொள் மடவர்க  ளுறவாமோ
உனதிரு வடியினி  யருள்வாயே

மறைபயி லரிதிரு  மருகோனே
மருவல ரசுரர்கள்  குலகாலா
குறமகள் தனைமண  மருள்வோனே
குருமலை மருவிய  பெருமாளே.

216. பரவரி தாகிய வரையென நீடிய
பணைமுலை மீதினி  லுருவான
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
பயிலிகள் வாள்விழி  அயிலாலே

நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
நிரைதரு மூரலி  னகைமீது
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
நிலையெழ வேயலை  வதுவாமோ

அரவணை யார்குழை பரசிவ ஆரண
அரனிட பாகம  துறைசோதி
அமையுமை டாகினி திரிபுரை நாரணி
அழகிய மாதருள்  புதல்வோனே

குரவணி பூஷண சரவண தேசிக
குககரு ணாநிதி  அமரேசா
குறமக ளானைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய  பெருமாளே.

217. பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
பலனேபெ றப்பரவு  கயவாலே
பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
பதறாமல் வெட்கமறு  வகைகூறி

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
வினையேமி குத்தவர்கள்  தொழிலாலே
விடமேகொ டுத்துவெகுபொருளேப றித்தருளும்
விலைமாதர் பொய்க்கலவி  யினிதாமோ

மலையே யெடுத்தருளு மொருவாள ரக்கனுடல்
வடமேரெ னத்தரையில்  விழவேதான்
வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
மருகாக டப்பமல  ரணிமார்பா

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
செவியார வைத்தருளு  முருகோனே
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
திருவேர கத்தில்வரு  பெருமாளே.

218. பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய  குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய  மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு  மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட  அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுர நல
காளும் வகையுறு  சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு  மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி  லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல  பெருமாளே.

219. மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு  நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண்  மடமாதர்

இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து  விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப  தொருநாளே

அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து  மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு  மிளையோனே

மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி  லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த  பெருமாளே.

220. முறுகு காள விடம யின்ற இருகண் வேலினுளம யங்கி
முளரி வேரி முகைய டாந்த  முலைமீதே
முழுகு காதல் தனைம றந்து பரமஞான வொளிசி றந்து
முகமொ ராறு மிகவி ரும்பி  அயராதே

அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
அடைய வாரி மிசைபொ ழிந்து  னடிபேணி
அவசமாகி யுருகுதொண்ட ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றை  அருள்வாயே

தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
தமர வேலை சுவற வென்ற  வடிவேலா
தரள மூர லுமை மடந்தை முலையிலார அமுத முண்டு
தரணி யேழும் வலம்வ ருந்திண்  மயில்வீரா

மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
வலிய காவல் புனைய ணங்கின்  மணவாளா
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
வளர்சு வாமி மலைய மர்ந்த  பெருமாளே.

221. வாதமொடு சூலை கண்ட மாலைகுல நோவு சந்து
மாவலிவி யாதி குன்ம  மொடுகாசம்
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
மாதர்தரு பூஷ ணங்க  ளெனவாகும்

பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
பாயலைவி டாது மங்க  இவையால்நின்
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
பாவமது பான முண்டு  வெறிமூடி

ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
ஈனமிகு சாதி யின்க  ணதிலேயான்
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
ஈரஅருள் கூர வந்து  எனையாள்வாய்

சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
சூழுமதில் தாவி மஞ்சி  னளவாகத்
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
ஸ்வாமிமலை வாழ வந்த  பெருமாளே.

222. வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
னீடு மெய்து யர்ந்து  வயதாகி
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
மார்க ளுக்கி சைந்து  பொருள்தேடி

ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
மாப ணிக்கள் விந்தை  யதுவான
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
டாவி மெத்த நொந்து  திரிவேனோ

சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
சூழ்சு ரர்க்க ணன்பு  செயும்வீரா
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
சூத னுக்கி சைந்த  மருகோனே

ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
தானி றைக்க வந்த  தொருசாலி
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
மேர கத்த மர்ந்த  பெருமாளே.

223. வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து
வாவென நகைத்துத் தோட்டு  குழையாட
வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி
வாசனை முலைக்கச் சாட்டி  யழகாகச்

சீர்கலைநெகிழ்த்துப்போர்த்து நூலிடை நெளித்துக்காட்டி
தீதெய நடித்துப் பாட்டு  குயில்போலச்
சேருறஅழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி
சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த  ருறவாமோ

சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி
சூர்கிரி கொளுத்திக் கூற்று  ரிடும்வேலா
தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த
தோலுடை யெனப்பர்க் கேற்றி  திரிவோனே

ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று
மேரெழி னிறத்துக் கூர்த்த  மகவோனே
ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற
ஏரக பொரப்பிற் பூத்த  பெருமாளே.

224. விடமும்வடி வேலு மதனச ரங்களும்
வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு  கதுதோயும்
ம்ருகமதப டீர பரிமள குங்கும
மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
வெருவுவன பார புளகத னங்களும்  வெகுகாம

நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
நளினமலர் சோதி மதிமுக விம்பமும்  அனநேராம்
நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
னகையுமுள மாதர் கலவியி னைந்துரு  கிடலாமோ

வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெகுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட  லவையேழும்
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
வகையிரவி போலு மணியும லங்க்ருத
மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு  பதுதோளும்

அடைவலமு மாள விடுசர அம்புடை
தசரதகு மார ரகுகுல புங்கவன்
அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய  மயிலேறி
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
அழகியசு வாமி மலையில் மர்ந்தருள்  பெருமாளே.

225. விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
தனத்த னந்தன தனதன வெனவொலி
விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு  மலைபாய
மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர்  வரிபோதத்

தரித்த தந்திரி மறிபுய மிசைபல
பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
தனக்கொ ழுந்துகள் ததைபடகொடியிடை  படுசேலை
தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர
பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ  தொழியாதோ

உரித்த வெங்கய மறியொடு புலிகலை
தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர  முருகோனே
உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
குவட்டை யும்பொடி படசத முடிவுற
வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற  விடும்வேலா

வரித்த ரந்துள வணிதிரு மருவிய
வுரத்த பங்கயர் மரகத மழகிய
வணத்த ரம்பர முறவிடு கணையினர் மருகோனே
வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
குறத்தி மென்புன மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலை தனிலமர்  பெருமாளே.

226. குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலாஎ னத்தினமு  முருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க  ளனைவோரும்

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண்  வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள்  தருவாயே

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படைகெடவேலெடுத்தவணி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு  செருமீதே
தவனமொடு மலகைநட மிடவீர பத்திராக
ளதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள்  பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதின கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு  முருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை  பெருமாளே.

227. குமர குருபர முருக சரவண
குகசண் முககரி  பிறகான
குழக சிவசத சிவய நமவென
குரவ னருள்குரு  மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின  முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர  லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட  வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு  மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர்  குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ்  பெருமாளே.

228. கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்
கோவையிதழ்க்கனி நித்தமும்விற்பவர்  மயில்காடை
கோகில நற்புற வத்தொடு குக்குட
ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்
கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள்  விரகாலே

தூம மலர்ப்பளி மெத்தைப டுப்பவர்
யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்
சோலை வனக்கிளி யொத்த மொழிச்சியர்  நெறிகூடா
தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
காசுப றிக்கம றித்துமு யக்கிகள்
தோதக வித்தைய டித்துந டிப்பவ  ருறவாமோ

மாமர மொத்தவ ரிக்குள் நெருக்கிய
சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி
வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக  கதிர்காம
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி
மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர
மாகிரி யிற்றிரை சுற்றிவளைத்திடும்  அலைவாயில்

ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
னாலுவ கத்தினி லுற்றுறு பத்தர்கள்
ஏதுநி னைத்தது மெத்த அளித்தரு  ளிளையோனே
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ
ராஜத லக்ஷண  லக்ஷúமி பெற்றருள்  பெருமாளே.

229. வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை
காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு
வாயிதழ் பொற்கம லர்க்குமிழொத்துள  துண்டக்ரீவ
வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ
டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை
மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர  ரம்பைமாதர்

காருறும் வித்திடை யிற்கத லித்தொடை
சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு
கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை  யொண்குலாவக்
கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு
மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்
காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர்  சந்தமாமோ

சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய
ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு
சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல  சங்கமாகச்
சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை 
யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி
சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள்  செங்கைவேலா

ஏரணி நற்குழ லைக்கக னச்சசி
மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத
வேடமு தச்சொரு பத்தகு றத்திம  ணங்கொள்வோனே
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷúமி பெற்றருள்  தம்பிரானே.

230. செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப  முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய ளித்த  பொருளாகி

மகவாவி னுச்சி விழியான னத்தில்
மலைநேர்பு யத்தி  லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி  தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க  வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த  குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்  முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த  பெருமாளே.

231. மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின  விரகாலே
மயலே யெழுப்பி யிதழே யருத்த
மலைபோல் முலைக்கு  ளுறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச  மறவாதே
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற  அருள்வாயே

குருவா யரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி  மணவாளா
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு  வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமைக்கொர்
சிறுவா கரிக்கு  மிளையோனே
திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த  பெருமாளே.

232. இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும்  விழியாலும்
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும்  இளைஞோர்நெஞ்

சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை கூறும்  மடவாரன்
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானம்  தருவாயே

குராவினிழல் மேவுங் குமாரனென நாளும்
குலாவியினி தோதன்  பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்
குடாவியிட வேலங்  கெறிவோனே

துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்விணை யோடும்  படிநூறுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும்  பெருமாளே.

233. கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ்  சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங்  கதைபோலும்

இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங்  கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் படிபாராய்

விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன்  பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங்  கெறிவோனே

தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாச மதுதானைம்  புலனோடுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும்  பெருமாளே.

234. கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த தொடைமாலை
கனமேரு வொத்தி டும்பனிருமாபு யத்த ணிந்த
கருணாக ரப்ர சண்ட கதிர்வேலா;

வடிவார்கு றத்தி தன்பொனடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து பணிவோனே
வளவாய்மை சொற்பர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்கள் இயல்போதி;

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்றுன்
அருளால ளிக்கு கந்த பேரியோனே
அடியேன் உரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
னருளேத ழைத்து கந்து வரவேணும்;

செடிநேருடற்கு டம்பை தனின் மேவி யுற்றிடிந்த
படிதானலக்க ணிங்கணுறலாமோ
திறமா தவர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த பெருமாளே.

235. விழியால் மருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
விரகான லத்த ழுந்த  நகையாடி
விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச
விளையாட லுக்கி சைந்து  சிலநாள்மேல்

மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
முழுமாயை யிற்பி ணங்கள்  வசமாகி
முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
முதிராத நற்ப தங்கள்  தருவாயே

பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
பொருதாளெ டுத்த தந்தை  மகிழ்வோனே
புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட
புனிதாமிரு கக்க ரும்பு  புணர்மார்பா

செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
திருவாய்மை செப்பி நின்ற  முருகோனே
திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற
திருவேர கத்த மர்ந்த  பெருமாளே.

236. இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக மலமூட-
இருளற விளங்கி ஆறுமுகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு மழகான;

பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத மலர்தூவப்-
பரிவுகொடநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட
பருமயிலுடன் குலாவி வரவேணும்;

அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி அருள்சேயே;

மருவலர்கள் திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை யுடையோனே-
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலை மிசை விளங்கு தேவர் பெருமாளே.

237. கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய  மருளாலே
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந டந்து தேயும்  வகையேபோய்

இதமிதமி தென்று  நாளு மருகருகி ருந்துகூடு
மிடமிடமி தென்று சோர்வு  படையாதே
இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாசல்
இரவுபகல் சென்று வாடி  யுழல்வேனோ

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை  மலரூடே
வகைவகையெ ழுந்து சாம வதிமறைவி  யந்து பாட
மதிநிழலி டுஞ்சு வாமி  மலைவாழ்வே

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு  மிளையோனே
அடைவொடுல கங்கள்யாவு முதவிநிலை கண்டபாவை
அருள்புதல்வ அண்ட ராஜர்  பெருமாளே.

ஐந்தாவது படைவீடு - திருத்தணி (குன்றுதோறாடல்)

238. திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
சிவவழி யுடனுற் றேக பரமீதே 
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
திரிபுர மெரியத் தீயி  னகைமேவி

இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி  தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார  மருள்வாயே

பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல  மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
பரியினை மலர்விட் டாடி  அடியோர்கள்

அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக  ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
டடியவர் கயிலைக் கான  பெருமாளே.

239. தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநீர்
சீரும்ப ழித்தசிவ மருளூறத்
தீதும்பி டித்தவினை யேதும்பொ டித்துவிழ
சீவன்சி வச்சொருப மெனதேறி;

நானென்ப தற்றுயிரோ டுனென்ப தற்றுவெளி
நாதம்ப ரப்பிரம வொளிமீதே
ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங்க ளிக்கபத மருள்வாயே

வானந்த ழைக்க அடி யேனுஞ்செ ழிக்க அயன்
மாலும்பி ழைக்க அலை விடமாள
வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு
மானின்க ரத்தனருள் முருகோனே;

தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண்க டப்பமல ரணிமார்பா
தானங்கு றித்துஎமை யாளுந்தி ருக்கயிலை
சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே.

240. நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி  லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து  மொழியாலும்

திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து  வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள்  விழுவேனோ

பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த  மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த  தனமாதை

மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி  லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர்  பெருமாளே.

241. பனியின் விந்துளி போலவே கருவினுறு
மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்
பனைதெ னங்கனி போலவே பலகனியின்  வயிறாகிப்
பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
மருவி யொன்பது வாசல்சே ருருவமுள
பதுமை யின்செயல்போலவே வளிகயிறி  னுடனாடி

மனவி தந்தெரி யாமலே மலசலமொ
டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
மயம யின்றொரு பாலனா யிகமுடைய  செயல்மேவி
வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
அறம றந்தக மீதுபோய் தினதினமு
மனமழிந்துடல்நாறினே னினியுனது  கழல்தாராய்

தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு  வளைபேரி
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு  மவுணோர்கள்

சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள்
குருதி யெண்டிசை மூடவே அலகைநரி
சிறையி னங்களி கூரவே நகையருளி  விடும்வேலா
சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி
மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்
திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ்  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 
temple news
306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar