பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
சென்னை:சென்னையில் நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மண்ணடி மல்லிகேஸ்வரர், பாரிமுனை மல்லீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்களிலும் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், மயிலாப்பூரில் மட்டும் மூன்று லட்சம் பேர் பங்கேற்றனர்.சென்னையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மண்ணடி மல்லிகேஸ்வரர், பாரிமுனை மல்லீஸ்வரர் கோவில்களில் கடந்த 18ம் தேதி முதல் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.அதில் ஏழாம் நாளான நேற்று நான்கு கோவில்களிலும், தேரோட்டம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், காலை 7.30 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார்.காலை 9:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு மாட வீதிகள் வழியாக மக்கள் வெள்ளத்தில் வந்த தேர், பிற்பகல், 1.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. அதேபோல், விநாயகர், சிங்காரவேலர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வலம் வந்தன.தேரோட்டத்தில் ஒரு லட்சம் பேர் எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் மூன்று லட்சம் பேர் பங்கேற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.திருவான்மியூர், மண்ணடி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், நேற்று காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரதவீதிகள் வழியாக சென்ற தேர் பிற் பகல், 2:00 மணிக்கு நிலைக்கு வந்தது.பாரிமுனை மல்லீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 8:00 மணிக்கு வலம் வர துவங்கிய தேர், காலை 10:30 மணிக்கு நிலையம் சேர்ந்தது. அதேபோல், மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 8:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. பிற்பகல் 3.15 மணிக்கு நிலைக்கு வந்தது.தேரோட்ட விழாக்களில், அன்னதானம், நீர் மோர், ரஸ்னா ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.வழிகாட்டும் திருவான்மியூர் திருவான்மியூரில் நேற்று நடந்த தேர் திருவிழாவில், தேர் சென்ற பின், சாலைகளில் குவிந்து கிடந்த குப்பை, பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை, வாகீசர் அடியார்கள் திருக்கோயில் உழவாரப்பணி திருக்கூட்டம் என்ற அமைப்பை சேர்ந்த, 60 சிவனடியார்கள் உடனடியாக அகற்றினர்.அவர்களுடன் மாநகராட்சி ஊழியர்களும் துப்புரவில் ஈடுபட்டனர். இதுகுறித்து, திருக்கூட்டத்தின் தலைவர் சுந்தரம் கூறுகையில், ""கடந்தாண்டு திருவிழாவுக்கு வந்த போது, குப்பை குவிந்ததை பார்த்து அகற்றினோம். இந்தாண்டு இரண்டாவது முறையாக இந்தபணியில் ஈடுபட்டுள்ளோம். இதுவும் ஒரு வகையில் இறை பணி தான், என்றார்.இன்று அறுபத்து மூவர் விழா மயிலாப்பூரில் பங்குனி விழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று, காலை 9:00 மணிக்கு, திருஞான சம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு, என்பை பூம்பாவையாக்கி அருளல் நிகழ்ச்சியும், 3:00 மணிக்கு, கபாலீஸ்வரர் வெள்ளி விமானத்தில், 63 நாயன்மார்களோடு திருக்காட்சி தரும் அறுபத்து மூவர் விழாவும் நடக்க உள்ளன.