பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
அவிநாசி:அவிநாசி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. 23, 24 ஆகிய இரு நாட்கள் தேரோட்டம் நடைபெறும். தமிழக அரசின் உத்தரவுப்படி, இந்தாண்டு, தேரோட்டம், பகலில் நடக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். தேர்த்திருவிழா நிகழ்வு குறித்து, செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் பேசினார். ராயம்பாளையம், புதுப்பாளையத்தை சேர்ந்த தேர் சன்னை மிராஸ்தார்கள், கட்டை போடுபவர்கள் பங்கேற்றனர்.செயல் அலுவலர் கூறுகையில், "திருவிழா அடுத்த மாதம் 16ல் துவங்கி, 27ல் பூர்த்தியடைகிறது.
23ம் தேதி பஞ்ச மூர்த்திகள், தேர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்றைய தினம் முழுவதும், ரதங்களில் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய லாம். மறுநாள் (24ம் தேதி) காலை 9.00 முதல் தேரோட்டம் நடக்கிறது. அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் தேரோட்டம் ஏப்., 25 காலை 10.00 மணிக்கு துவங்கும், என்றார்.கூட்டத்தில், முன்னாள் அறங் காவலர்கள் நடராஜன், பழனிசாமி, ஊர்த்தலைவர்கள் தினேஷ்குமார் (புதுப்பாளையம்), பழனிசாமி (ராயம்பாளையம்), தேர் கட்டை மிராஸ்தார் குஞ்சப்பன், சிவக்குமார சிவாச்சாரியார் உட்பட பலர் பங்கேற்றனர்.தேர்த்திருவிழா விவரம்:அடுத்த மாதம் 16ம் தேதி கொடியேற்றம், 17ல் சூரிய, சந்திர மண்டல காட்சிகள், 18ல் பூத, அன்ன, அதிகார நந்தி மற்றும் கிளி வாகன காட்சிகள், 19ல் புஷ்ப பல்லக்கு, கைலாய வாகனம், 20ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜ பெருமாள் கோவில் கொடியேற்றம், 21ல் கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள், 22ல் பஞ்சமூர்த்திகள் தேருக்கு எழுந்தருளல்.வரும் 23ம் தேதி காலை 9.00 மணிக்கு பெரிய தேரோட்டம், 24ம் தேதி காலை 9.00 மணிக்கு அம்மன் தேரோட்டம், மாலை 5.00 மணிக்கு பரிவேட்டை, வண்டித்தாரை, 25ம் தேதி மாலை 6.00 மணிக்கு தெப்பத்தேர், 26ல் தரிசன காட்சி, 27ல் மஞ்சள் நீர் உற்சவம், இரவு 7.00 மணிக்கு மயில் வாகன காட்சி.