பதிவு செய்த நாள்
27
மார்
2013
10:03
மதுரை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், 21 தீர்த்த கிணறுகளையும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தீர்த்தம் வீணாகாமல், சிக்கனமாக தெளிக்கும் மாற்று வழிகளை ஆராய மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கோவை வக்கீல் வெண்ணிலா தாக்கல் செய்த பொது நல மனுவில், ""ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றி கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்த பகுதியில் கலக்கின்றன. 22 இடங்களில் தீர்த்தமாட, புரோக்கர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். கோயில் புனிதத் தன்மையை பாதுகாக்க வேண்டும், எனக் கோரினார். நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் கண்ணன் பதில் மனு: அக்னி தீர்த்தத்தில், பக்தர்கள் நீராடுகின்றனர். முன்னோர்களுக்கு பூஜை செய்து, துணிகளை விட்டுச் செல்கின்றனர். அவற்றை அகற்ற, ராஜா என்பவர் 2009 ல் ஏலம் எடுத்தார். அவர் துணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. உரிமத்தை நகராட்சி ரத்து செய்தது. கீழ்கோர்ட்டில், ராஜா இடைக்காலத்தடை உத்தரவு பெற்றார். பின், தடை நீங்கியது. நகராட்சி சார்பில், மறு ஏலம் நடந்த அறிவிப்பு வெளியானது. இதற்கு ராஜா, கீழ் கோர்ட்டில் தடையுத்தரவு பெற்றுள்ளார். அக்னி தீர்த்தம் அருகே இருந்த கழிப்பறையை அகற்றி விட்டோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 31 லட்சம் ரூபாயில் அமைத்துள்ளோம். அக்னிதீர்த்தம் அருகே சுத்திகரிக்கப்படும் நீரை, 600 மீ., அப்பால் கடத்துகிறோம். தமிழ்நாடு ஓட்டலிலிருந்து வெளியேறும் கழிவு நீர், அக்னிதீர்த்தத்தில் கலக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம், என குறிப்பிட்டார்.நீதிபதிகள்: தீர்த்தம் தெளிக்கும் இடத்தில், பக்தர்களுக்கு இடையூறுகள், பிரச்னை ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. 21 தீர்த்த கிணறுகளையும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தீர்த்தம் வீணாகாமல், சிக்கனமாக தெளிக்கும் முறைகள் பற்றி மாற்று வழிகளை ஆராய மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் பேராசிரியர் அருணாசலம், உதவி பேராசிரியர் சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. அக்குழு ஏப்.,1 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.