பதிவு செய்த நாள்
27
மார்
2013
10:03
தூத்துக்குடி: பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்றிரவு, திருச்செந்தூர் கோயிலில், சுவாமி - அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, கோயில்நடை, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 5 மணிக்கு, வள்ளி அம்மன், தபசுக்காட்சிக்காக, பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி, சிவன் கோயிலைச்சேர்ந்தார். மதியம் 2:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு, சப்பரத்தில், சுவாமி குமரவிடங்கப்பெருமான், சிவன் கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தார். தொடர்ந்து, அங்கு, திருக்கல்யாணத்திற்கு முந்தைய, தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 108 மகாதேவர் சன்னதி முன், சுவாமி - அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மொய் எழுதி, திருமாங்கல்ய பிரசாதம் பெற்றுச்சென்றனர்.