பதிவு செய்த நாள்
27
மார்
2013
10:03
பழநி: அரோகரா சரண கோஷத்துடன், பழநி கிரிவீதியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நடந்தது. பால்குடங்கள், தீர்த்தக் காவடிகளுடன், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பழநி பங்குனி உத்திர விழா மார்ச் 20 ல், கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாள் நடைபெறுகிறது. சேலம், திருச்சி, நாமக்கல், பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மயில்காவடி, தீர்த்தக்காவடி, கரகாட்டம், ஓயிலாட்டம், மயிலாட்டம் ஆடியும், உடலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் 7 ம் நாளான நேற்று அதிகாலையில், சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, தீர்த்தம் வழங்குதல் நடந்தது. முத்து குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் திருவுலா வந்தார், காலை 11.30 க்கு மேல் திருஆவினன் குடியிலிருந்து, வடக்கு கிரிவீதி பாதவிநாயகர் கோயில் அருகே திருத்தேரில் சுவாமி தேர் ஏற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு, மாலை 4.40 க்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு கிரி வீதிகள் வழியாக, தேர் சென்ற போது, பக்தர்கள் நவதானியங்களையும், பழங்களையும் வீசி, ""வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, என, சரணகோஷம் எழுப்பினர். விழா ஏற்பாடுகளை கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணைக்கமிஷனர் ராஜமாணிக்கம் செய்திருந்தனர்.