பதிவு செய்த நாள்
27
மார்
2013
10:03
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடக்கும் சேர்த்தி ஸேவையில், நம்பெருமாளும், தாயாரும் சேர்ந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தனர். பூலோக வைகுண்டமான, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆதி பிரம்மோற்ஸவம் என்றழைக்கப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்டகப்படிகள் பெற்றார்.
நாச்சியாருடன் ஸேவை: ஸ்ரீரங்கம் சார்பு கோவிலான, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தை பெறக்கூடிய சிறப்புக்குரியது. ஸ்ரீரங்கம் உற்சவரே, இக்கோவிலுக்கும் உற்சவராக இருக்கிறார். கடந்த, 23ம் தேதி, நாச்சியாரின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரமான பங்குனி ஆயில்யத்தன்று, ஸ்ரீரங்கத்திலிருந்து உறையூர் புறப்பட்ட நம்பெருமாள், நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் சேர்த்தி ஸேவை சாதித்தார். அப்போது தான் அணிந்திருந்த கணையாழியை நாச்சியாரிடம் கொடுத்ததாராம். அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் திரும்பிய நம்பெருமாள், நெல் அளவை கண்டருளினார். தாயார் சன்னதியில் திருமஞ்சனமும் நடந்தது. நம்பெருமாளின் கணையாழியை காணாமல் திகைத்த தாயார், நம்பெருமாளிடம் கேட்டபோது, கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போனதாக பொய்யுரைத்தாராம். அதையடுத்து, தங்கக்குதிரையில் எழுந்தருளிய நம்பெருமாள் கொள்ளிடக்கரை முழுவதும் கணையாழியை தேடிவிட்டு(!), சித்திரை வீதியில் வையாளி கண்டருளினார். வெறுங்கையுடன் திரும்பிய நம்பெருமாளிடம் தாயார் ஊடல் கொண்டார். இதனால் நேற்று மதியம், பிரணயகலகம் எனப்படும் தாயார், நம்பெருமாளை மட்டையால் அடித்த மட்டையடி உற்சவம் நடந்தது. மூலஸ்தானம் திரும்பிய நம்பெருமாள், தாயாரும், சர்வ அலங்காரத்தில், "கத்யத்ரய மண்டபம் எனப்படும் சேர்த்தி மண்டபத்தில் மாலை ஸேவை சாதித்தனர். "நம்பெருமாளும், தாயாரும் ஒன்றாக ஸேவை சாதிப்பதால், ஸ்ரீரங்கமே பூலோக வைகுண்டமாகும் என்ற ஐதீகத்தினால், நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்த சேர்த்தி ஸேவையை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸேவித்து பரவசமடைந்தனர். இன்று தேர்: விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று காலை, 6.30 மணிக்கு நடக்கிறது. 28ம் தேதி நடக்கும் ஆளும் பல்லக்கு விழாவுடன் தேரோட்ட திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.