பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 2.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் பொங்கல் வைத்து, படைகலன் கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் அம்மை அழைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தலைமை பூசாரிகள் கன்னியப்பன், விநாயகமூர்த்தி ஆகியோர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள், மஞ்சள் கிணற்றில் குளித்து, வரிசையாக குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 8.00 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக தீபாராதனை, அம்மன் பூதவாகன காட்சியுடன் புறப்படுதல். மதியம் 2.00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சி, 4.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், பக்தர்கள் வேண்டுதலுக்காக, குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் உப்பு, மிளகு போடுதல் மற்றும் பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் போன்ற நிகழ்ச்சியை செய்தனர். விழாவுக்கு பெருமாநல்லூரை சுற்றியுள்ள ஊர் களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவிநாசி டி.எஸ்.பி., ரங்கசாமி தலைமையில் எட்டு இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.