பதிவு செய்த நாள்
27
மார்
2013
10:03
நகரி: திருமலையில், தெப்ப உற்சவத்தை ஒட்டி, நான்கு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த மாதம், 24ம் தேதி, திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், ஐந்து நாள் தெப்ப உற்சவ விழா துவங்கியது; இன்றுடன் விழா நிறைவடைகிறது. தெப்ப உற்சவத்தின், நான்காம் நாளான நேற்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி, தெப்ப திருக்குளத்தில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளினார். இதையொட்டி, திருமலையில், நேற்று மட்டும், நான்கு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 2.75 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.சென்னையை சேர்ந்த, நிஜலிங்கம் என்ற பக்தர், ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை, நேற்று முன் தினம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார். அத்துடன், திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும், அன்னதான திட்டத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அதேபோல்,சென்னையை சேர்ந்த முரளி என்ற பக்தரும், 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.